2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. 50 இடங்களில் வெற்றி பெறும் என நான் கூறவில்லை: நிதிஷ் குமார் மறுப்பு
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கையை நான் கூறவில்லை என நிதிஷ் குமார் இன்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.
பாட்னா,
பீகாரில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். அவரது கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் மணிப்பூரில் கடந்த வெள்ளி கிழமை பா.ஜ.க.வில் இணைந்தனர்.
பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டு, பணபலத்தினால் எம்.எல்.ஏ.க்களை இழுத்து கொள்கிறது என ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் லல்லன் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது நேற்று குற்றச்சாட்டாக கூறினார்.
லல்லன் கூறும்போது, எங்களது எம்.எல்.ஏ.க்கள் அருணாசல பிரதேசத்தில் 7 பேரும், மணிப்பூரில் 6 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். எங்களை தடுத்து நிறுத்த எவ்வளவு போராடினாலும் கவலையில்லை. 2023-ம் ஆண்டில் நாங்கள் தேசிய கட்சியாக உருவெடுப்போம் என அவர் கூறினார்.
இந்த சூழலில், நிதிஷ் குமார் வரும் 5-ந்தேதி டெல்லி செல்கிறார். இந்த டெல்லி பயணத்தின் போது ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் நிதிஷ் குமார் சந்திக்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு நிதிஷ் குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்ற மேலவை எம்.பி. மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான சுஷில் குமார் மோடி கூறும்போது, தேசிய கட்சியாக மாறும் நோக்கம் அவர்களிடம் இருந்தது. முன்பு 3 மாநிலங்களில் அவர்கள் இருந்தனர். தற்போது, பீகாரில் மட்டுமே ஆட்சியில் உள்ளனர்.
அதனால், அவர்களால் தேசிய கட்சியாக முடியாது. நிதிஷ் குமார் தனது வாழ்வில் ஒரு போதும் பிரதமராக முடியாது. அவரால் பிரதமர் வேட்பாளராக கூட முடியாது என்றும் கூறினார்.
இந்நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று கூறும்போது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 50 இடங்களிலேயே வெற்றி பெறும். எப்படியெனில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்காக நான் பணியாற்றி வருகிறேன் என கூறினார்.
பீகாரின் பாட்னா நகரில் சமீபத்தில் நடந்த ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதற்காக நிதிஷ் குமார் பணியாற்றுவதற்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் பா.ஜ.க. ஆட்சியின் கீழ் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரகாலம் நீடிக்கிறது என்ற இரு தீர்மானங்கள் நிறைவேறின.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ், ஒரு சில நாட்களில் டெல்லிக்கு சென்று பா.ஜ.க. அல்லாத முன்னணி அமைப்பதற்காக, பிற கட்சிகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறேன் என கூறினார். ஆனால், அதன் விவரங்களை அவர் வெளியிடவில்லை. இந்நிலையில், அவரது டெல்லி பயணம் மற்றும் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவது மற்றும் அவரது கட்சியை தேசிய கட்சியாக மாற்றும் திட்டம், பிரதமர் வேட்பாளர் திட்டம் ஆகியவை அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.
இந்த சூழலில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், அவரது கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 50 தொகுதிகளுக்கு கூடுதலான இடங்களை கைப்பற்றாது என நான் கூறவில்லை என கூறியுள்ளார்.
அவர் பேசும்போது, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதிலேயே நான் கவனம் செலுத்தி இருக்கிறேன். எந்தவொரு எண்ணிக்கை பற்றியும் நான் பேசவில்லை என கூறியுள்ளார்.
எனினும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் அலுவலகத்தில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிவிப்பில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து விட்டால், 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 50 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெறாது. இதனை செய்து முடிப்பதற்காக நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என நிதிஷ் குமார் கூறியுள்ளார் என்ற தகவல் வெளியிடப்பட்டு இருந்தது கவனிக்கத்தக்கது.