பெங்களூரு மாநகராட்சி தேர்தலை தள்ளிவைக்க அரசு திட்டம்?

பெங்களூருவில் வார்டுகளின் இடஒதுக்கீடு பட்டியல் வெளியான பின்பு பல சர்ச்சைகள் ஏற்பட்டு இருப்பதன் மூலம் மாநகராட்சி தேர்தலை தள்ளிவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-08-05 20:46 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் வார்டுகளின் இடஒதுக்கீடு பட்டியல் வெளியான பின்பு பல சர்ச்சைகள் ஏற்பட்டு இருப்பதன் மூலம் மாநகராட்சி தேர்தலை தள்ளிவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பா.ஜனதாவுக்கு சாதகமாக...

பெங்களூரு மாநகராட்சியின் வார்டுகள் 198-ல் இருந்து 243-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வார்டுகளின் எண்ணிக்கை உயர்வு, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநகராட்சி தேர்தல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி தேர்தலை நடத்தும்படியும், இடஒதுக்கீடு பட்டியலை தயாரித்து வெளியிடும்படியும் அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி, பெங்களூரு மாநகராட்சியின் 243 வார்டுகளின் இடஒதுக்கீடு பட்டியலை அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க ஒரு வாரம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடஒதுக்கீடு பா.ஜனதாவுக்கு சாதகமாக உள்ளதாகவும், காங்கிரசு்கு எதிராக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன. அதாவது பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் உள்ள 80 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

பெண்களுக்கு ஒதுக்கீடு

குறிப்பாக தாசரஹள்ளி தொகுதியில் 9 வார்டுகள், சிவாஜிநகரில் 5 வார்டுகள், புலிகேசிநகரில் 7 வார்டுகள், காந்திநகர் தொகுதியில் உள்ள 6 வார்டுகள் ஆகியவை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டசபை தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக மாநகராட்சி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்து காத்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் எமாற்றம் அடைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்த பா.ஜனதாவினருக்கும், வார்டு இடஒதுக்கீடு மூலமாக அதிர்ச்சி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் செயல்பட்டு இருந்தார். அவர், பைரசந்திரா வார்டு முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில், நாகராஜிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போது அந்த வார்டு பொதுப்பிரிவு பெண்கள் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 243 வார்டுகளில் 130 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தலை தள்ளி வைக்க திட்டம்?

இதுபோன்ற காரணங்களால் மாநகராட்சியின் இடஒதுக்கீடு பட்டியல் பல்வேறு சர்ச்சைகளையும், குறிப்பாக காங்கிரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் மூலம் மாநகராட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் மாநகராட்சி தேர்தலை தற்போது நடத்துவதற்கு அரசுக்கு எண்ணம் இல்லை. அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெறும் முன்பாக தேர்தலை நடத்தினால் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்தும்படி அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் இடஒதுக்கீடு பட்டியல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக இருப்பதாக கூறி, இடஒதுக்கீடு பட்டியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளே கோர்ட்டில் வழக்கு தொடரலாம். அவ்வாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால், தற்போதைக்கு மாநகராட்சி தேர்தலை தள்ளிப்போடலாம், உடனடியாக நடத்த முடியாத நிலை ஏற்படும் என்று அரசு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்