மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல்: விசாரணைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு
மல்லிகார்ஜுன கார்கேவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோ குறித்து பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பா.ஜனதா மீது குற்றம்சாட்டி உள்ளார்.
அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக சித்தாப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மணிகண்ட ரத்தோடு பேசி உள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.
முதல்-மந்திரி பேட்டி
இதற்கிடைய ஆடியோ விவகாரம் குறித்து வேட்பாளர் மணிகண்ட ரத்தோடு கூறுகையில் 'தனக்கும், அந்த ஆடியோவுக்கும் சம்பந்தம் கிடையாது' எனவும், 'அது முற்றிலும் பொய்' எனவும் கூறினார். இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களை சந்தித்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ குறித்து எனக்கு தெரியாது. ஆனால் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.