விளம்பரத்துக்காக பணத்தை வீணடிக்காமல் நலத்திட்டங்களை செய்கிறோம்- பிரதமர் மோடி பேச்சு
விளம்பரத்துக்காக பாஜக அரசு பணத்தை வீணடிக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாவ்நகர்,
குஜராத் மாநிலத்திற்கு இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இம்மாநிலத்திற்கு பல முறை வருகை தந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை துவக்கி வைத்துள்ளார் . இந்நிலையில் 2 நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி குஜராத் வந்தடைந்தார்.
மாநிலத்தின் பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அங்குள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் விளம்பரத்துக்காக பாஜக அரசு மக்கள் பணத்தை வீணடிக்கவில்லை என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
நலத்திட்டங்களை பொறுத்த வரையில் எந்தவித ஆரவாரமும் இன்றி, விளம்பரத்துக்காக பணத்தை வீணடிக்காமல் அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து முடித்துள்ளோம். எங்களை பொருத்தவரை அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை என்பது மட்டுமே ஆகும்.
சவுராஷ்டிரா நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்தி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறோம். இந்த திட்டம் தேர்தலை மனதில் வைத்து ஒருகட்டத்தில் விமர்சிக்கப்பட்டது. இவை அனைத்தும் தவறு என்று நான் நிரூபித்திருக்கிறேன். நாங்கள் எப்போதுமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம்" என்றார்.