பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பா.ஜ.க. எம்.பி.... பிரசாரத்தில் சர்ச்சை
என்னுடைய தந்தை வயதுடைய நபர் ஒருவர், என்னிடம் அவருடைய அன்பை காட்டுகிறார் என அந்த பெண் கூறியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் மால்டாகா உத்தர் தொகுதியின் வேட்பாளர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யாக உள்ள காகென் முர்மு வாக்கு கேட்டு வீடு, வீடாக சென்றார். அவர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி திரிணாமுல் காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பெண்களுக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர். நீங்கள் பார்த்த விசயங்களை உங்களால் நம்ப முடியவில்லை என்றால், நாங்கள் அதனை விளக்குகிறோம்.
முர்மு, அவருடைய பிரசாரத்தின்போது, பெண் ஒருவரை முத்தமிடுகிறார் என எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த எம்.பி.க்கள் முதல், வங்காள பெண்களுக்கு எதிரான ஆபாச பாடல்கள் பாடுவது என பெண்களுக்கு எதிரான அரசியல்வாதிகள் பா.ஜ.க.வில் உள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறது.
இதுவே மோடியின் குடும்பத்தினர், பெண்களுக்கு ஆற்றக்கூடிய விசயம் ஆகும். ஆட்சிக்கு வந்து விட்டால் அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? என கற்பனை செய்து பாருங்கள் என்றும் தெரிவித்து உள்ளது.
அவர்கள், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறிய பா.ஜ.க. எம்.பி. மற்றும் மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷண் சிங் மற்றும் அசன்சோல் தொகுதியின் முன்னாள் பா.ஜ.க. வேட்பாளரான பவன் சிங்கையும் குறிப்பிட்டு கூறியுள்ளனர். பவன் சிங் தேர்தலுக்கான போட்டியில் இருந்து வெளியேறி விட்டார்.
எனினும், உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பேசிய அந்த பெண், அது அன்பின் வெளிப்பாடு என கூறியுள்ளார். அவர் கூறும்போது, என்னுடைய தந்தை வயதுடைய நபர் ஒருவர், என்னிடம் அவருடைய அன்பை காட்டுகிறார். எனது கன்னத்தில் முத்தம் வைக்கிறார். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது? மக்கள் ஏன் அசிங்க மனநிலையுடன் இருக்கின்றனரோ? இதில் ஒன்றும் தவறு இல்லை என கூறியுள்ளார்.
சி.பி.எம். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான முர்மு, 2019-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். அவரும், தன்னுடைய செயலை நியாயப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அந்த பெண் என்னுடைய குழந்தையை போன்றவர் என்று கூறியுள்ளார்.