உரிகவுடா, நஞ்சேகவுடா பெயரில் ஒக்கலிகர்களின் வரலாற்றை திரிக்க பா.ஜனதா முயற்சி; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

உரிகவுடா, நஞ்சேகவுடா பெயரில் ஒக்கலிகர்களின் வரலாற்றை திரிக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2023-03-20 20:27 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

திப்பு சுல்தான்

உரிகவுடா, நஞ்சேகவுடா குறித்து படம் எடுக்கும் முடிவை கைவிடுவதாக மந்திரி முனிரத்னா கூறியுள்ளார். வரலாற்றை திரித்து கூறுவதில் பா.ஜனதாவினர் நிபுணர்கள். உரிகவுடா, நஞ்சேகவுடா பெயரில் ஒக்கலிகர்களின் வரலாற்றை திரிக்க பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள். சாதி-மதங்கள் இடையே விரோதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பயன் அடைய அவர்கள் திட்டமிடுகிறார்கள்.

திப்பு சுல்தான் இறந்து 200 ஆண்டுகள் ஆகிறது. இந்த விஷயத்தில் தற்போது உரிகவுடா, நஞ்சேகவுடா பெயர்களை உருவாக்கி பா.ஜனதாவினர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். மண்டியா மாவட்டம் அமைந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி ஜவரேகவுடா ஒரு புத்தகம் எழுதினார். அதில் ராஜேகவுடா என்பவர் தொட்டநஞ்சேகவுடா, உரிகவுடா ஆகியோர் திப்பு சுல்தானுக்கு எதிராக போராடினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஆட்சேபனை தெரிவித்தனர்

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, வரலாற்றில் இல்லாத ஒரு விஷயத்தில் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறி ஆட்சேபனை தெரிவித்தனர். அதற்கு அந்த புத்தகத்தை எழுதியவர், ஒக்கலிகர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கட்டும் என்று எழுதி இருப்பதாகவும், அதை விட்டு விடுங்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து கருத்து கூற வேண்டிய ராஜேகவுடா தற்போது உயிருடன் இல்லை. அதனால் இந்த விவகாரத்தை வைத்து கொண்டு பா.ஜனதா புதிய வரலாற்றை எழுத முயற்சி செய்கிறது.

சில வரலாற்று அறிஞர்கள், உரிகவுடா, நஞ்சேகவுடா கற்பனை கதாபாத்திரங்கள் என்று கூறியுள்ளனர். ஆனாலும் இந்த விவகாரத்தை பா.ஜனதாவினர் விடாமல் பிடித்து கொண்டுள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய திப்பு சுல்தானை உரிகவுடா, நஞ்சேகவுடா ஆகியோர் கொன்றதாக கூறி ஒக்கலிகர்கள் தேச விரோதிகள் மற்றும் கொலையாளிகள் என்று பிம்பிக்க முயற்சி நடக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதாவினர் எதை வேண்டுமானாலும் உருவாக்குவார்கள். அவா்கள் யாருடைய வீட்டையும் பாழாக்குவார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்