இலவச திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் பா.ஜனதா போராட்டம் நடத்தும்; முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார்

இலவச திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் பா.ஜனதா போராட்டத்தில் ஈடுபடும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-24 21:57 GMT

பெங்களூரு:

இலவச திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் பா.ஜனதா போராட்டத்தில் ஈடுபடும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ஜே.பி.நகரில் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

காங்கிரஸ் வாக்குறுதி

கர்நாடக சட்டசபை தேர்தலில் 5 இலவச திட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அந்த திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களுக்கு காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. வீடு, வீடாக சென்று இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி உத்தரவாத அட்டையும் வழங்கினார்கள். இந்த 5 இலவச திட்டங்கள் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தோல்விக்கு காரணமாகும்.

காங்கிரசின் இலவச திட்டங்களை மாநில மக்கள் நம்பி வாக்களித்திருந்தனர். தற்போது இலவச திட்டங்களை நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு காலம் கடத்தி வருகிறது. மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், பா.ஜனதா போராட்டத்தில் ஈடுபடும்.

சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா

பட்ஜெட் கூட்டத்தில் கவர்னர் உரை முடிந்ததும் இலவச திட்டங்களை நிறைவேற்ற கோரி சட்டசபைக்கு உள்ளே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவார்கள். விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நானே முன்னின்று தர்ணா நடத்துவேன். இலவச திட்டங்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் காங்கிரஸ் அரசு நிறைவேற்ற வேண்டும்.

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததால் கட்சி தொண்டர்கள் சோர்ந்து விடக்கூடாது. தொண்டர்கள் மீண்டு எழ வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். காங்கிரஸ் அளித்த பொய்யான வாக்குறுதிகள் பற்றி மாநில மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்