2021-22 நிதி ஆண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வருமானம் ரூ.1,912 கோடி : மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு?
2021-22 நிதி ஆண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வருமானம் ரூ.1,912 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
நமது நாட்டில் மொத்தம் 8 அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளாக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை, பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகும். இந்தக் கட்சிகள் 2021-22-ம் ஆண்டில் தங்களது வருமானம் எவ்வளவு என்கிற விவரத்தை தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ளன. இது குறித்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய அரசியல் கட்சிகள் மொத்த வருமானம் ரூ.3,289.34 கோடி ஆகும்.
* மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் வருமானம் மட்டுமே ரூ.1917.12 கோடி. 8 தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் இது பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகையில் ரூ.854.46 கோடி செலவிடப்பட்டுள்ளதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
* காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.541.27 கோடி ஆகும். செலவு ரூ.400.41 கோடி ஆகும். வருமானத்தில் 73.98 சதவீதத்தை காங்கிரஸ் கட்சி செலவு செய்துள்ளது.
* திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.545.74 கோடி ஆகும். இந்தக் கட்சி செலவு செய்துள்ள தொகை ரூ. 268.33 கோடி.
* 8 அரசியல் கட்சிகள் மொத்த வருமானத்தில் 55.09 சதவீதம், அதாவது ரூ.1,811.94 கோடி, தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த நன்கொடை ஆகும்.
* தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு ரூ.1,033.70 கோடியும், திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.528.13 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.236.09 கோடியும், தேசியவாத காங்கிரசுக்கு ரூ.14 கோடியும் கிடைத்துள்ளது.
* பிற நன்கொடை வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள நன்கொடை என பார்த்தால், பா.ஜ.க.வுக்கு ரூ.1,775.43 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.582.52 கோடியும், காங்கிரசுக்கு ரூ.347.99 கோடியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.71.95 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ரூ.65.87 கோடியும் கிடைத்துள்ளன.