பீகார்: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 9 பேர் மாயம்
பீகாரில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் மாயமான 9 பேரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
பாட்னா,
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பஹ்மதி ஆற்றில் நேற்று படகு சென்றுகொண்டிருந்தது. பத்ஹமா கட் பகுதிக்கு சென்ற படகில் பள்ளிக்குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் பயணித்தனர்.
மதுர் கட் என்ற பகுதியில் சென்றபோது படகு திடீரென ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர்.
இந்த படகு விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனாலும், இந்த படகு விபத்தில் தண்ணீரில் மூழ்கி 40 வயது நபர் மற்றும் 4 வயது குழந்தை என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.