பி.எப்.ஐ. அமைப்பினர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பி.எப்.ஐ. அமைப்பினரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-05 21:27 GMT

மங்களூரு-

பிரவீன் நெட்டார் படுகொலை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆளும் பா.ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதிகாரிகள் சோதனை

அதாவது பி.எப்.ஐ. அமைப்பினரான சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே பூடுமனேயில் வசிக்கும் முகமது முஸ்தபா, கல்லுமுட்லுமானேவில் வசிக்கும் உமர் பாருக், பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் மற்றும் குடகு மாவட்டம் மடிகேரி அருகே காடிகே மசூதி பகுதியைச் சேர்ந்த தவ்பால் ஆகியோருக்கு, பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க துப்பு கொடுத்தால் ரூ.14 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மங்களூரு, உடுப்பி, தார்வார், உப்பினங்கடி, சுள்ளியா, மைசூரு, உப்பள்ளி உள்பட கர்நடகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வரும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி இஸ்மாயில் நலபந்த் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

பெங்களூருவுக்கு...

இந்த சோதனையின்போது 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளரான ஷபி பெல்லாரே, கிராம பஞ்சாயத்து உறுப்பினர் இக்பால் பெல்லாரே, சுள்ளியா பகுதியைச் சேர்ந்த இப்ராகிம் ஷா ஆகியோர் ஆவர். இவர்களுடன் சேர்த்து இதுவரையில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இஸ்மாயில் நலபந்த் வீட்டில் இருந்து பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டது தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைபற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், கொலை திட்டத்தை அரங்கேற்ற சதித்திட்டம் தீட்டியதாகவும் கிடைத்த தகவலின்பேரில் கைதான 3 பேர் மற்றும் இஸ்மாயில் நலபந்த் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கைதான 3 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பெங்களூருவுக்கு அழைத்து வந்து மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் முன்பு ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்