கியாஸ் கட்டரை பயன்படுத்தி திருட முயற்சி: ஏ.டி.எம். எந்திரத்தில் தீப்பிடித்து ரூ.19.5 லட்சம் எரிந்து சாம்பல்

கியாஸ் கட்டரை பயன்படுத்தி திருட முயன்றபோது ஏ.டி.எம். எந்திரத்தில் தீப்பிடித்து ரூ.19.5 லட்சம் எரிந்து சாம்பலானது.

Update: 2022-05-26 23:28 GMT

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே ஒசரோடு பகுதியில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்மநபர்கள் சிலர் கியாஸ் கட்டரை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை திறக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏ.டி.எம். எந்திரத்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

அந்த தீ ஏ.டி.எம். எந்திரம் முழுவதும் பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தில் பிடித்த தீயை சுமார் 15 நிமிடம் போராடி அணைத்தனர். ஆனாலும் ஏ.டி.எம். எந்திரத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பணம் எரிந்து சாம்பலானது.

இதுபற்றி அறிந்ததும் வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். எந்திர நிறுவன ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்திற்குள் வைத்த பணத்தையும், வாடிக்கையாளர்கள் எடுத்த பணத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் ரூ.19.65 லட்சம் இருந்ததும், அந்த பணம் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்