பெங்களூரு வாலிபரின் உடல் சார்மடி மலையில் மீட்பு

காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெங்களூரு வாலிபரின் உடல் சார்மடி மலைப்பாதையில் மீட்கப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-02 20:25 GMT

சிக்கமகளூரு:-

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர் கொலை

பெங்களூரு யஸ்வந்தபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட மத்திகெரே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 24). இவர் தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பற்றி அறிந்ததும் பெண் வீட்டார் கோவிந்தராஜை கண்டித்துள்ளனர்.

ஆனாலும் அவர் இளம்பெண்ணை காதலிப்பதை கைவிடவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு இளம்பெண்ணின் உறவினர்களான அனில், பரத் உள்பட 4 பேர் கோவிந்தராஜை கடத்தி சென்று கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கொட்டிகேஆரா பகுதியில் சார்மடி மலைப்பகுதியில் வீசினர்.

4 பேர் கைது

இதற்கிடையே கோவிந்தராஜை காணவில்லை என்று யஸ்வந்தபுரம் போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காதல் விவகாரத்தில் கோவிந்தராஜை கொலை செய்து உடலை சார்மடி மலைப்பகுதியில் வீசியது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, கோவிந்தராஜின் காதலியான இளம்பெண்ணின் உறவினர்கள் அனில், பரத் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோவிந்தராஜின் உடலை வீசிய இடத்தை அடையாளம் காட்ட 4 பேரையும் போலீசார் சிக்கமகளூருவுக்கு அழைத்து சென்றனர்.

சார்மடி மலைப்பகுதியில் மீட்பு

இதையடுத்து யஸ்வந்தபுரம் போலீசார், பனகல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மற்றும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் உதவியுடன் சார்மடி மலைப்பகுதியில் கோவிந்தராஜின் உடலை தேடினர்.

நீண்ட நேரம் தேடுதல் வேட்டைக்கு பிறகு 50 அடி பள்ளத்தில் கிடந்த கோவிந்தராஜின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பனகல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்