பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் சுமார் 4 லட்ச ரூபாய் மோசடி செய்த கல்லூரி மாணவன்

ஆர்டரை ரத்து செய்த பின் பொருளை திரும்பிக்கொடுக்காமல் 4 லட்ச ரூபாய் வரை கல்லூரி மாணவன் மோசடி செய்துள்ளார்.

Update: 2023-08-19 16:19 GMT

பெங்களூரு,

மத்தியபிரதேசத்தை சேர்ந்த சிரங் குப்தா என்ற இளைஞர் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார்.

இவர் கடந்த மே மாதம் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் இருந்து விலை உயர்ந்த ஐபோன் 14 புரோ மேக்ஸ் மற்றும் 3 ஐபோன் 14 பிளஸ் செல்போன்களை ஆர்டர் செய்துள்ளார். கிரிட் கார்டு மற்றும் யுபிஐ மூலம் அதற்கான பணத்தையும் செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ஆர்டர் செய்யப்பட்ட போன்களை வர்த்தக நிறுவனம் சிரங் குப்தாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

பின்னர் சில நாட்கள் கழித்து ஆர்டர் செய்த போன்களை சிரங் குப்தா திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், செலுத்திய தொகையை திரும்பி பெற்றுக்கொண்டார். ஆனால், சிரங் குப்தா திருப்பி அனுப்பிய போன்கள் அமேசான் நிறுவனத்திற்கு திரும்பி வரவில்லை.

இதை அறிந்த அமேசான் சேவை மைய அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அந்த வாடிக்கையாளரின் முகவரியில் சென்று விசாரணை நடத்துமாறு கோரியுள்ளது. இதனை தொடர்ந்து அந்நிறுவன அதிகாரி சிரங் குப்தா தங்கியுள்ள விடுதிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, மாணவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

சிரங் குப்தாவின் நண்பர் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் செல்போன் வாங்குமாறு பின்னர் அதை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். அப்படி செய்தால் அந்த வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் பொருள் தங்களிடம் வந்து சேர்ந்து விட்டதாகவும் பணம் திரும்பி கொடுக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கிவ்ட்டதாகவும் வரும் என கூறியுள்ளார். அந்த நண்பரின் பேச்சை கேட்டு சிரங் பொருட்களை வாங்கிவிட்டு ஆர்டரை ரத்து செய்தும் பொருளை திருப்பி அனுப்பாமல் அதன் சில பாகங்களை மட்டுமே திருப்பி அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சிரங் குப்தா இதுவரை 3.88 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் சிரங் குப்தாவை போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணை நடத்திய போலீசார் இந்த மோசடியில் ஈடுபட டெலிகிராமில் ஒரு கும்பல் இயங்கி வருவதை கண்டுபிடித்தனர்.

அந்த கும்பல் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் இருந்துகொண்டு அமேசான் செயலியின் ரகசிய கடவு சொற்களை பயன்படுத்தி செயலிக்குள் சென்று ஆன்லைனில் ஆர்டர் செய்து ரத்து செய்யப்பட்ட பொருள்கள் மீண்டும் அமேசான் சேமிப்பு கிடங்கிற்கே வந்துவிட்டது போன்று மாற்றியமைத்து மோசடியில் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. செல்போன், லேப்டாப் என சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை அந்த கும்பல் மோசடி செய்து வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த கும்பலின் வங்கிக்கணக்கில் இருந்த 30 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், இந்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அமேசான் செயலியை ஹேக் செய்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.      

Tags:    

மேலும் செய்திகள்