துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெங்களூரு என்ஜினீயர் மாயமானதால்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெங்களூரு என்ஜினீயர் மாயமாகி இருப்பதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரை மீட்டு கொடுக்கும்படி குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-02-10 21:03 GMT

பெங்களூரு:-

பெங்களூரு என்ஜினீயர்

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பெங்களூரு என்ஜினீயர் மாயமாகி இருப்பதால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரு பீனியாவில் உள்ள நைட்ரஜன் தயாரிக்கும் நிறுவனத்தில் என்ஜினீயராக விஜய்குமார் (வயது 36) என்பவர் பணியாற்றி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் இவரது பூர்வீகம் ஆகும். இவர், பணியாற்றும் நிறுவனம் துருக்கி நாட்டிலும் புதிதாக நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் துருக்கியில் நடைபெற்று வருகிறது. அந்த கட்டிட பணிகளை கண்காணிப்பதற்காக என்ஜினீயர் விஜய்குமார், பெங்களூருவில் இருந்து துருக்கிக்கு சென்றிருந்தார்.

நிலநடுக்கத்திற்கு பின் மாயம்

அதாவது கடந்த மாதம் (ஜனவரி) 25-ந் தேதி விஜய் குமார் சென்றிருந்தார். இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விஜய்குமார் தங்கி இருந்த ஓட்டல் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி இருந்தது. அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் விஜய்குமார் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

அவர் கடந்த 5-ந் தேதி கடைசியாக தன்னுடைய குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி இருந்தார். அதன்பிறகு, விஜய்குமாரை குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிலநடுக்கத்திற்கு பின்பு விஜய்குமார் மாயமாகி இருப்பதால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூதரகத்திற்கு கடிதம்

விஜய்குமாரை மீட்டு கொடுக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய்குமார் மாயமாகி இருப்பது குறித்து துருக்கியில் உள்ள இந்திய நாட்டு தூதரகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. விஜய்குமார் தங்கி இருந்த ஓட்டலில் மீட்பு பணிகள் நடந்து வருவது பற்றி தகவல் கிடைத்திருப்பதாகவும், அதன் பின்னரே விஜய்குமார் பற்றிய தகவல் தெரியவரும் என்றும் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் சித்தப்பா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்