காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூரு சிறுவர்கள் 2 பேர் உயிரிழப்பு

தலக்காடுவில் காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

Update: 2023-05-24 18:45 GMT

மைசூரு-

தலக்காடுவில் காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த  2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

அண்ணன் - தம்பி

பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரோகித்(வயது 15) மற்றும் நிதீஷ்(13). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்கள். இதில் ரோகித் 9-ம் வகுப்பும், நிதீஷ் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த தங்களது உறவினர்கள் 6 பேருடன் சேர்ந்து மைசூரு மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். அதாவது அவர்கள் பெங்களூருவில் இருந்து ரெயில் மூலம் மத்தூருக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் மைசூரு மாவட்டம் தலக்காடுவுக்கு சுற்றுலா வந்திருந்தனர்.

ஆற்றில் மூழ்கி பலி

அவர்கள் அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரோகித்தும், நிதீசும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் தத்தளித்தனர். தண்ணீரில் அவர்கள் தத்தளிப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.

இதற்கிடையே அவர்கள் இருவரையும் மீட்க அவர்களது நண்பர்கள் 6 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்களும் ஆற்றில் தத்தளித்தனர். அவர்களை அங்கிருந்த பரிசல் ஓட்டுபவர்கள், மீட்டார்கள்.

உடல்கள் மீட்பு

பின்னர் இதுபற்றி தலக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தலக்காடு போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அப்பகுதி நீச்சல் வீரர்களுடன் சேர்ந்து ரோகித் மற்றும் நிதீசின் உடல்களை பிணமாக தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தலக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்