பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பைப் பெறுகிறதா?

பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பை பெறுகிறதா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-01-06 21:22 GMT

பெங்களூரு:

கால் நடையாக பயணம் செய்து வந்த மனிதர்கள், கால்நடைகளை பயணத்திற்கு பயன்படுத்தத் தொடங்கிய பிறகுதான் வாகனங்கள் உருவாக தொடங்கின.

மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் அதிகமாக போக்குவரத்துக்கு பயன்பட்ட காலங்களில் நமக்கு பயணத் தூரமும், பயணச் செலவும் குறைவாகவே இருந்தன.

மிஞ்சினால் ஒருநாளில் ஐந்தோ, பத்தோ கிலோ மீட்டர் தூரம்தான் பயணம் இருக்கும். கொஞ்சம் புல்லும், கொள்ளும், புண்ணாக்கும் மட்டுமே செலவாக இருக்கும்.

மாடு, குதிரைகளின் கழிவுகளில் பக்கவிளைவுகள் இல்லை. பயன்கள் மட்டுமே இருந்தன.

வாகனங்களில் என்று எந்திரம் நுழைந்ததோ அன்று, பயணதூரமும் அதிகமானது. பெட்ரோல், டீசல், கியாஸ் என்று பயணச் செலவும் அதிகமாக உயர்ந்தது. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பக்கவிளைவுகளும் அதிகமானது.

பேட்டரி வாகனங்கள்

இன்றைய காலகட்டத்தில் நாம் பயணத்தையோ, பயண தூரத்தையோ குறைக்க முடியாது. பயணச் செலவையும், பக்க விளைவுகளையும் கொஞ்சம் குறைக்க முயற்சி செய்யலாம். அதற்கு வசதியாக வந்து இருப்பதுதான் பேட்டரிகளில் இயங்கும் வாகனங்கள்.

பொது போக்குவரத்துகளை நாடி, தேடிச்சென்ற மக்கள், இப்போது நினைத்த நேரத்தில் பயணப்பட்டு செல்லும் வகையில், சொந்தமாக வாகனங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு வாகனம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் அங்கமாகிவிட்டது.

எரிபொருள் விலை

வாகன எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலை கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்றம் கண்டதால், புதிய வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது.

அந்த எரிபொருட்களுக்கு மாற்றாக, நவீன நாகரிக சூழலுக்கு ஏற்ற வகையில் சந்தைக்கு வந்திருக்கும் மின்சார வாகனங்கள் மேல் தற்போது பலர் கவனம் திரும்பி இருக்கிறது.

விலை அதிகம் என்பதால், ஆரம்பத்தில் அதற்கு மக்கள் மத்தியில் மவுசு இல்லாவிட்டாலும், எரிபொருள் விலை ஏற்றம், மாசு இல்லை, செலவு குறைவு, அரசு மானியம் போன்ற காரணிகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் பார்வை அதன்மேல் விழத்தொடங்கி இருக்கிறது.அதன் காரணமாக, ஆட்டோ மொபைல் துறையில் இருக்கும் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் உற்பத்தியை சற்றுக் குறைத்ததோடு, மின்சார வாகனங்களின் உற்பத்தியில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கின்றன.

இடையில் ஆங்காங்கே சில மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தினாலும், அது தற்போது மறைந்து, மீண்டும் விற்பனை அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

வசதியாக இருக்கிறதா?

பேட்டரி விலை அதிகமாக இருக்கிறது, சார்ஜிங் வசதி போதுமான இடங்களில் இல்லை போன்ற சில குறைகள் கூறப்பட்டாலும், மின்சார வாகனங்கள் எதிர்கால மாற்றத்தின் கட்டாயம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

நகரங்களில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சார்ஜிங் வசதி செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களிலும் இனி அதற்கான வசதிகள் வரவாய்ப்பு இருக்கிறது.

விற்பனை அதிகரிப்பு

கர்நாடகத்தை பொறுத்தவரை தலைநகரான பெங்களூருவில் 1 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் ஓடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. மேலும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் பேட்டரியில் ஓடும் இருசக்கர வாகனங்கள் விற்பனை மற்றும் முன்பதிவு செய்வது கடந்த ஆண்டு பல மடங்கு உயர்ந்திருந்தது. மின்சார வாகனங்களின் விற்பனையையும் அரசு ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு நகருக்குள் மட்டும் இயக்கப்பட்டு வந்த மின்சார பஸ்கள், தற்போது மைசூருவிலும் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மின்சார வாகனங்களுக்கும் அரசு மானியம் வழங்கி வருகிறது. இதனால் பெங்களூருவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் தேவை அதிகரித்து வருகிறது.

தற்போது மின்சார வாகனங்கள் மக்களின் பயன்பாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது? எந்த வகையில் வசதியாக இருக்கிறது? அதன் சாதக பாதகம் என்ன? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-

உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை

பெங்களூரு சாமுண்டிநகரை சேர்ந்த காண்டிராக்டர் ராஜா கூறுகையில், "நான் கடந்த 4 ஆண்டுகளாக மின்சார ஸ்கூட்டர் ஓட்டி வருகிறேன். இதுவரை பராமரிப்புக்கு எந்த செலவும் செய்யவில்லை. தினமும் 30 கிலோ மீட்டர் செல்கிறேன். 2 நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்கிறேன். மிகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. பெட்ரோல் செலவை ஒப்பிடுகையில் எனது ஸ்கூட்டருக்கு ஆகும் மின்சார செலவு மிக, மிக குறைவு தான்.

ஏனெனில் எனது வீட்டுக்கு மாதம் ரூ.500 மின் கட்டணம் வரும். தற்போது ரூ.700 வருகிறது. ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய மாதம் வெறும் ரூ.200 மட்டும் தான் ஆகிறது. மின்சார ஸ்கூட்டரில் இருக்கும் பிரச்சினை உதிரி பாகங்கள் தான். ஸ்கூட்டர் பழுதானால் உதிரி பாகங்கள் கிடைப்பதே இல்லை. உதிரி பாகங்கள் எப்போதும் கிடைக்கும் நிறுவனத்தை பார்த்து மின்சார ஸ்கூட்டர் வாங்குவது நல்லது" என்றார்.

முதுகுவலி இல்லை

இதுகுறித்து இனிப்பு மற்றும் கார தின்பண்டங்கள் வியாபாரி சுரேஷ் கூறும் போது, "எனக்கு 55 வயதாகிறது. இனிப்பு, காரம் உள்ளிட்ட தின்பண்டங்களை வியாபாரம் செய்கிறேன். நான் சரக்கு மின்சார ஸ்கூட்டரை பயன்படுத்துகிறேன். சரக்குகளை ஸ்கூட்டர் முன்பாகவும், பின்பாகவும் வைத்துக்கொள்ள போதிய இடவசதி உள்ளது. அந்த ஸ்கூட்டர் நான் கொண்டு செல்லும் பாரத்தை தாங்குவதாக உள்ளது. ஸ்கூட்டரின் ேஹன்ட் பார் பெரிதாக உள்ளதால், ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது.

பெட்ரோல் வாகனத்தை பயன்படுத்திவிட்டு, இந்த ஸ்கூட்டரை ஓட்டுவது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. குறிப்பாக முதுகுவலி ஏற்படுவதில்லை. மின்சார ஸ்கூட்டரை வாங்கும்படி பலருக்கு ஆலோசனை சொல்லி வருகிறேன். பழுது பார்ப்பு செலவு குறைவாக ஏற்படுகிறது" என்றார்.

ஓட்டுனர் உரிமம் அவசியமில்லை

இதுகுறித்து பனசங்கரியை சேர்ந்த உஷா கூறுகையில், "மின்சார ஸ்கூட்டரை ஓட்டுவது எளிதாக உள்ளது. ஓட்டுனர் உரிமம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஓட்டுனர் உரிமம் எடுத்து தான் ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும் என்பதால் பயமாக இருந்தது. இந்த மின்சார ஸ்கூட்டர்கள் பெண்களுக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக வேககட்டுப்பாடு உள்ளது. சில ஸ்கூட்டரில் அதிகபட்ச வேகமே மணிக்கு 30 அல்லது 40 கிலோ மீட்டர் தான் என்பதால், பெண்கள் பாதுகாப்பாக ஓட்ட முடியும். விபத்து ஏற்படாது. சார்ஜ் செய்ய மறந்து விட்டால் கஷ்டம் தான். ஆனாலும் பெட்ரோலை ஒப்பிடுகையில் செலவு குறைவாக ஆகிறது" என்றார்.

பழுது பார்ப்பு செலவு குறைவு

இதுகுறித்து ராஜாஜிநகரில் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை செய்து வரும் மணிகண்டன் கூறுகையில், "எங்களது நிறுவனத்தில் 22 மாடல்களில் மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளன. மின்சார ஸ்கூட்டர்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், இந்த வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பெட்ரோல் வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ஒப்பிட்டால், மின்சார வாகனத்திற்கு வெறும் 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. அரசும் குறிப்பிட்ட ஸ்கூட்டர்களுக்கு மானியம் வழங்குவதால், அதன்விலை குறைந்து மக்கள் வாங்கும்படியாக உள்ளது.

நவீன வசதிகள், ஓட்டுனர் உரிமம் தேவையில்லை, ஹெல்மெட் அணிய தேவையில்லை என பல வசதிகள் இருக்கிறது. பெட்ரோல் விற்பனை நிலையம் போன்று, சார்ஜ் செய்யும் மையங்கள் அதிகமாக திறக்கும் போது, மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை பலமடங்கு உயரும். மின்சார ஸ்கூட்டருக்கு பழுது பார்ப்பு செலவும், மின் கட்டணமும் மிகவும் குறைவு. பேட்டரிகளின் தரத்தை பொருத்து, ஸ்கூட்டர்களின் விலையில் மாற்றம் இருக்கும். தற்போது தீப்பிடிக்காத வகையில் பேட்டரிகள் வடிவமைக்கப்படுவதால், மக்கள் அச்சமின்றி வாங்குகின்றனர்" என்றார்.

அனைத்து வாகனங்களுக்கும் மானியம் தேவை

கர்நாடகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடக அரசு, சில வரி விலக்கு அளித்தது. பிற மாநிலங்கள் வரி விலக்கிற்கு மாறாக, மானிய முறையில் மின்சார வாகனங்களுக்கு வரி செலுத்தும் வசதியை ஏற்படுத்தியது. ஆனால் குறிப்பிட்ட சில மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்குகிறது. டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை போன்று கர்நாடகத்திலும் அனைத்து விதமான மின்சார வாகனங்களுக்கும் மானியம் வழங்க வேண்டும், முக்கியமான பகுதிகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகனங்களை விற்கும் விற்பனையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்