சிக்கமகளூருவில் தர்மஸ்தலா பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்
சிக்கமகளூருவில் தர்மஸ்தலா பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சிக்கமகளூரு:-
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தர்மஸ்தலாவில் புகழ் பெற்ற மஞ்சுநாத சாமி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் சிவராத்திரியை முன்னிட்டு, தர்மஸ்தலாவிற்கு செல்லும் பக்தர்கள் சிக்கமகளூரு வழியாக பயணிப்பார்கள். இவர்களில் பெரும்பாலான பக்தர்கள் சிக்கமகளூருவில் இரவு தங்கிவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் அவர்களுக்கு மாவட்டம் நிர்வாக சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். இந்த ஆண்டு தர்மஸ்தலா பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிக்கமகளூரு மாவட்டம் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த அடிப்படை வசதிகளை மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். குறிப்பாக மூடிகெரே தாலுகா கொட்டிகெஆரா மற்றும் பனகல் பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது தர்மஸ்தலா கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தங்குவதற்காக இடம், கழிப்பிட வசதி, குடிநீர், பாதுகாப்பு வசதி குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர். அதேபோல இரவு நேரம் பக்தர்கள் தர்மஸ்தலாவிற்கு நடந்து செல்வதால், சிக்கமகளூரு மாவட்டத்தில் இருந்து தர்மஸ்தலாவிற்கு செல்லும் சாலைகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனென்றால் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று ஒருவர் இறந்தார். இதனால் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தியிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் கூறியுள்ளார்.