சிக்காம்வியில் தோற்கடிக்க சதி நடப்பதால் தாவணகெரே வடக்கு தொகுதியில் பசவராஜ் பொம்மை போட்டி?

சிக்காம்வியில் தன்னை தோற்கடிக்க சதி நடப்பதால் தாவணகெரே வடக்கு தொகுதியில் போட்டியிட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து அவர் இறுதி முடிவு எடுக்க உள்ளார்.

Update: 2023-04-01 18:45 GMT

பெங்களூரு:

சிக்காம்வி தொகுதி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் மேலிட தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்காம்வி தொகுதியில் தான் போட்டியிட்டு கடந்த முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் சிக்காம்வி தொகுதியிலேயே போட்டியிட அவர் முடிவு செய்திருந்தார். ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக முன்னாள் மந்திரியான வினய் குல்கர்னியை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் திட்டமிட்டுள்ளனர்.

வெற்றி சுலபம் இல்லை

பசவராஜ் பொம்மையும், வினய் குல்கர்னியும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சிக்காம்வி தொகுதியில் லிங்காயத் மற்றும் முஸ்லிம் வாக்குகள் தான் அதிகம் உள்ளது. இதனால் சிக்காம்வி தொகுதியில் வினய் குல்கர்னி நிறுத்தப்பட்டால், லிங்காயத் ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவரையே வேட்பாளராக நிறுத்தினால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.

ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஜனதா பரிவாரில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர் என்பதால், முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் குமாரசாமி இதுவரை பசவராஜ் பொம்மைக்கு மறைமுக ஆதரவையே தெரிவித்து வருகின்றனர். அதனால் சிக்காம்வியில் முஸ்லிம் வேட்பாளரே ஜனதாதளம் (எஸ்) கட்சி நிறுத்த வாய்ப்புள்ளது. ஒரு வேளை ஜனதாதளம் (எஸ்) கட்சியும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால் பசவராஜ் பொம்மை வெற்றி பெறுவது சுலபம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

தாவணகெரே வடக்கு தொகுதி

இதுபோன்ற காரணங்களாலும் தன்னை தோற்கடிக்க மறைமுகமாக காங்கிரஸ் கட்சி சதி செய்வதாகவும் முதல்-மநதிரி பசவராஜ் பொம்மை கருதுவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சிக்காம்வி தொகுதியில் போட்டியிடாமல் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள தாவணகெரே மாவட்டம் வடக்கு தொகுதியில் போட்டியிட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டமிட்டு வருவதாகவும், இதுபற்றி மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிக்காம்வி மற்றும் தாவணகெரே வடக்கு தொகுதிகளில் போட்டியிட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு பா.ஜனதா மேலிடம் வாய்ப்பளிக்க சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள், சிக்காம்வி தொகுதியில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் யாரை வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக கவனித்து இந்த விவகாரத்தில் முடிவு செய்ய பசவராஜ் பொம்மை தீர்மானித்துள்ளார்.

மேலிட தலைவர்களுடன் ஆலோசனை

குறிப்பாக தொகுதி மாறுவதற்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் அனுமதி வழங்க வேண்டும். சிக்காம்வியில் தனக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை 2 கட்சிகளும் நிறுத்தினால், தொகுதியில் தன்னுடைய வெற்றியை உறுதி செய்ய தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். அவ்வாறு சிக்காம்வியிலேயே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடங்கி கிடக்கும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வதில் பாதிப்பு ஏற்படும்.

எனவே தாவணகெரே வடக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்தும், சிக்காம்வி தொகுதியில் இறுதி வரை என்ன நடக்கிறது என்பதை கவனித்தும், இந்த விவகாரம் பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து விட்டு, தொகுதி மாறுவதில் தன்னுடைய இறுதி முடிவை எடுக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்