மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக மத்திய மந்திரியுடன் பசவராஜ் பொம்மை தலைமையிலான குழு சந்திப்பு

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக மத்திய மந்திரியுடன் பசவராஜ் பொம்மை தலைமையிலான குழு சந்தித்தது.

Update: 2022-07-26 21:33 GMT

பெங்களூரு: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 24-ந்தேதி டெல்லிக்கு சென்றார். டெல்லியில் அவர் கர்நாடக திட்டங்கள் குறித்து பல்வேறு துறை மந்திரிகளை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் கா்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவை பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக குழுவினர் டெல்லியில் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, மத்திய மந்திரி ஷோபா, மாநில மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அரக ஞானேந்திரா, மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரிரங்கன் அறிக்கையை அமல்படுத்த கூடாது என அந்த குழு வலியுறுத்தியது.

இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 'மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணைக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அரசாணை அமலுக்கு வந்தால் கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் அந்த அறிக்கையை அமல்படுத்த கூடாது என்று மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி கர்நாடகத்தின் நிலைப்பாட்டை கூறியுள்ளோம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்