தலித் வீட்டில் உணவு சாப்பிட்ட பசவராஜ் பொம்மை-எடியூரப்பா; தேர்தல் நாடகம் என காங்கிரஸ் விமர்சனம்
தலித் வீட்டில் பசவராஜ் பொம்மை-எடியூரப்பா உணவு சாப்பிட்டனர். தேர்தல் நாடகம் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கூட்டாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த 11-ந் தேதி இந்த சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். முதலில் ராய்ச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். அங்கு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர்கள் விஜயநகர் மாவட்டம் ஹூவினஹடகலி தாலுகாவில் உள்ள ஹீரேஹடகலி கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த லவ்லி ஹனுமந்தவ்வா வீட்டிற்கு சென்றனர்.
அங்கு பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோர் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். அதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோளும் கலந்து கொண்டார். அவர்கள் நேற்று முன்தினம் ஒசப்பேட்டேவில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டனர். இது தேர்தல் நாடகம் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.