சித்தராமையாவிடம் இருந்து நான் பாடம் கற்க தேவை இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

சோனியா காந்தி முன்பு கைகட்டி நிற்கும் சித்தராமையாவிடம் இருந்து நான் பாடம் கற்க தேவை இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-01-06 21:28 GMT

பெங்களூரு:

சோனியா காந்தி முன்பு கைகட்டி நிற்கும் சித்தராமையாவிடம் இருந்து நான் பாடம் கற்க தேவை இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

சுரங்க பாதைகள்

துமகூரு மாவட்டம் சிராவில் பா.ஜனதா மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

பிரதமர் மோடி மக்களுக்கு என்ன செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கின்றன. கர்நாடகத்தில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், சுரங்க பாதைகள் அமைக்க மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி வழங்கியுள்ளது. கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.9,500 கோடி நிதி உதவி, 1 கோடி பேருக்கு ஆயுஸ்மான் பாரத் அட்டை, மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த திட்டங்கள் ஆகும்.

ரூ.13 ஆயிரம் கோடி நிதி

துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி நிதி வழங்கும். இந்த திட்டத்தில் சிரா தாலுகாவுக்கு நீர் வழங்கப்படும். மோடி அப்பட்டமான ஜனநாயகவாதி. அவர் கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். நான் அவர் முன்பு நாய்க்குட்டி போல் நடுங்குவதாக சித்தராமையா குறை கூறியுள்ளார்.

சோனியா, ராகுல் காந்தி முன்பு கைகட்டி நிற்பவர் சித்தராமையா. அவரிடம் இருந்து நான் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. 15-வது நிதி ஆணையத்திற்கு அப்போது முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா சரியான தவகல்களை வழங்கவில்லை. அதனால் கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைவாக கிடைத்தது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்