கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பான நகர திட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பான நகர திட்டம் விஸ்தரிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Update: 2023-03-08 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பான நகர திட்டம் விஸ்தரிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

நிறைய சாதனைகள்

கர்நாடக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தாய், மனைவியிடம் இருந்து ஆண்கள் எப்போதும் சேவையை பெறுகிறார்கள். பெண்ணுக்கு தொந்தரவு ஏற்பட்டால் அது கணவர் மற்றும் குழந்தைகள் காரணம். அதனால் கணவர், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்களை முன்னிலைப்படுத்தும் சமூகத்தை நாம் கொண்டுள்ளோம். ஆனால் பெண்கள் தொடக்கம் முதலே நிறைய சாதனைகளை படைத்துள்ளனர்.

அதிக முதலீடு

நமது புராணங்களில் பெண்களின் பங்கு முக்கியமாக உள்ளது. கித்தூர் ராணி சென்னம்மா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார். இவ்வாறு பல்வேறு பெண்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை வழங்கினர். நாம் பிரச்சினைகள் குறித்து பேசுகிறோம். ஆனால் பெண்கள் பிரச்சினைகளுடன் தான் வாழ்கிறார்கள்.

அதனால் தான் நிலத்தில் கூலித்தொழில் செய்யும் அனைத்து பெண்களுக்கும் மாதம் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம். வேலை, கல்வி, முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வித்துறையில் அதிக முதலீடு செய்துள்ளோம். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெற முடியும்.

கர்நாடகம் வளர்ச்சி

பெண் திறன் திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அரசு ரூ.5 லட்சம் வழங்குகிறது. கர்நாடகத்தின் மக்கள்தொகை 6½ கோடி. 13 கோடி கைகள் பணியாற்றினால் நாம் இன்னும் வளர்ச்சி அடைய முடியும். பெண் சக்தியால் கர்நாடகம் வளர்ச்சி பெறும் என்று எங்கள் அரசு நம்புகிறது. பெண்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். பாதுகாப்பான நகரங்கள் திட்டத்தின் கீழ் பெங்களூருவில் 7,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்காக தனியாக ஒரு கட்டுப்பாட்டு மையமும் செயல்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 400 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பான நகர திட்டம், மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்படும். பெண்களின் சேமிப்பு பழக்கத்தால் தான் நமது பொருளாதாரம் இன்னும் பலமாக உள்ளது. பெண்களின் இந்த சேமிப்பு பழக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது.

விமானங்கள்

நாம் எந்த வீட்டில் பிறந்தாலும் சரி, வளர்ந்து மற்றவர்களுக்கு சேவையாற்ற வேண்டும். இதனால் சமூகத்திற்கு பயன் ஏற்படும். தகவல், உயிரி தொழில்நுட்பம், வங்கிகள் உள்பட எல்லா துறைகளிலும் பெண்கள் பணியாற்றுகிறார்கள். விமானங்கள், பஸ்கள், லாரிகளை ஓட்டுகிறார்கள். அதே போல் நமது கன்னட பெண்கள் பெயர் ஈட்ட வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்