பசவனகுடி கடலைக்காய் திருவிழா வருகிற 21-ந் தேதி தொடக்கம்

பெங்களூருவில் வரலாற்று சிறப்புமிக்க பசவனகுடி கடலைக்காய் திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. 15 ஆண்டுக்கு பின்பு தெப்ப உற்சவமும் நடக்க உள்ளது.

Update: 2022-11-13 16:36 GMT

பசவனகுடி:-

21-ந்தேதி கடலைக்காய் திருவிழா

பெங்களூரு பசவனகுடியில் தொட்ட கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் கடலைக்காய் திருவிழா வரலாற்று சிறப்புமிக்கதாகும். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடலைக்காய் திருவிழா தொடங்கி நடைபெறும். இந்த கடலைக்காய் திருவிழாவில் பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பிற மாவட்டங்கள், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் கடலைக்காயை விற்பனைக்காக கொண்டு வருவது உண்டு.

அதன்படி, இந்த ஆண்டுக்கான கடலைக்காய் திருவிழா வருகிற 21-ந்தேதி தொடங்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகிற 21-ந் தேதியில் இருந்து 23-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கடலைக்காய் திருவிழாவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடலைக்காய் வியாபாரிகள், உணவு பொருட்கள் உள்பட 2 ஆயிரம் கடைகள் திறக்கப்படலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெப்ப உற்சவம்

பசவனகுடி தொட்ட கணபதி கோவிலில் நடைபெறும் இந்த கடலைக்காய் திருவிழாவின் போது கெம்பாபுதி ஏரியில் தெப்ப உற்சவமும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. ஏரியில் தண்ணீர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 15 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை.

ஆனால் இந்த ஆண்டு பெங்களூருவில் பரவலாக நல்ல மழை பெய்திருந்தது. இதன் காரணமாக கெம்பாபுதி ஏரியும் நிரம்பி இருக்கிறது. இதையடுத்து, கடலைக்காய் திருவிழாவுடன் தெப்ப உற்சவம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருவதாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ரவி சுப்பிரமணியா தெரிவித்துள்ளார்.

ஏற்பாடுகள் தீவிரம்

மழையின் காரணமாக பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா, ராமநகர் மாவட்டம் கனகபுரா, மாகடி, சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலைக்காய் விளைச்சலும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடலைக்காய் திருவிழாவில் அதிகம் பங்கேற்க வாய்ப்புள்ளது. கடலைக்காய் திருவிழா 21-ந் தேதி தொடங்கினாலும், அதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பாகவே பசவனகுடியில் உள்ள நடைபாதைகளில் வியாபாரிகள் கடலைக்காய் விற்பனையை தொடங்கி விடுவார்கள்.

இதனால் பசவனகுடி தொட்ட கணபதி கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்