பங்காரப்பா ஆட்சி நிலைமை மீண்டும் ஏற்பட வாய்ப்பு- போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி

காவிரி விவகாரத்தில் பங்காரப்பா ஆட்சி நிலைமை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-23 20:54 GMT

பெங்களூரு:-

போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

யாருக்கு எதிராக போராட்டம்

காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும், காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் தேவையான ஆவணங்கள், தகவல்களை அரசு தெரிவித்துள்ளது. அப்படி இருந்தும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று மாநிலத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டங்கள் யாருக்கு எதிராக நடக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் சட்ட நிபுணர்கள் கர்நாடகத்தின் நியாயத்தை எடுத்து வைத்து வாதிட்டு இருந்தனர். இதற்கு முன்பு இருந்த சட்ட நிபுணர்களின் ஆலோசனையின் பேரிலேயே தற்போதும் வாதம் வைக்கப்பட்டது. ஆனாலும் தண்ணீர் திறக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு பங்காரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது தற்போது இருக்கும் சூழ்நிலை, அப்போதும் இருந்தது.

ராணுவம் அனுப்பி வைக்கப்படும்...

அந்த சந்தர்ப்பத்தில் கோர்ட்டு உத்தரவை மீறினால் ராணுவம் அனுப்பி வைக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. தற்போதும் அதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றுவதுடன், படிப்படியாக காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி பிரச்சினைக்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு கூட்டியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிடுகிறது. அந்த உத்தரவை முதலில் பின்பற்றும்படி கோர்ட்டு சொல்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படியே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அரசுக்கு ஒத்துழைப்பு

காவிரி நதிநீர் விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. போராட்டம் நடத்துவதற்கு அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அந்த போராட்டம் அமைதியான முறையில் நடத்த வேண்டும். பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இந்த போராட்டத்தை அரசியலுக்காக பயன்படுத்தி கொண்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது.

அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் வேறு ஒருவருக்கு லாபம் கிடைத்து விடும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்