கர்நாடகத்தின் 12-வது முதல்-மந்திரி பங்காரப்பா

கர்நாடகத்தின் 12-வது முதல்-மந்திரி பங்காரப்பா ஆவார்.

Update: 2023-04-15 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தின் 12-வது முதல்-மந்திரியான பங்காரப்பா, சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா குப்பத்தூர் கிராமத்தில் கடந்த 1933-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி பிறந்தார். சட்டம் பயின்ற இவர் கடந்த 1967-ம் ஆண்டு சொரப் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட இவர் முதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ் மந்திரி சபையில் வருவாய் மற்றும் விவசாயம், பொதுப்பணித்துறை, உள்துறை போன்ற பதவிகளை வகித்து உள்ளார். மேலும் 1979-ம் ஆண்டு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து 1983-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பங்காரப்பா, மாநில கட்சியான கர்நாடக கிராந்தி ரங்கா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் அப்போது மாநிலத்தில் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த கர்நாடக கிராந்தி ரங்கா மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து ராமகிருஷ்ணா ஹெக்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் கூட்டணி கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கு இருந்து விலகிய அவர் மீண்டும் காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார்.

இதைதொடர்ந்து கடந்த 1985-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க சட்டசபை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சி சார்பில் பங்காரப்பா நியமிக்கப்பட்டார். 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து முதல்-மந்திரி விரேந்திரா பட்டீல் தலைமையிலான மந்திரி சபையில் விவசாயத்துறை மந்திரியாக இவர் பொறுப்பேற்றார். ஆனால் கடந்த 1990-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் முதல்-மந்திரி வீரேந்திர பட்டீல் பாதிக்கப்படவே அந்த பதவி பங்காரப்பாவுக்கு கொடுக்கப்பட்டது.

கடந்த 1992-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக பதவி வகித்தார். பங்காரப்பா முதல்-மந்திரியாக இருந்த காலகட்டத்தில் 3 சிறப்பான திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தினார். அதாவது பழமையான 36 ஆயிரம் கோவில்களை புனரமைக்கவும், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டவும், குடிசை மற்றும் கைவினை தொழிலாளர்களை காக்கும் வகையில் அவர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார். இதன் மூலம் குடிசை மற்றும் கைவினை தொழிலாளிகளின் வாழ்வில் அப்போது அவர் ஒளியேற்றிவைத்தார். ஆனால் அவரது ஆட்சியில் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதனால் கட்சியில் இருந்து விலகிய அவர் கர்நாடக காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். இதைதொடர்ந்து 1996-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.பி.யாக வெற்றிபெற்றார். இதைதொடர்ந்து 1999, 2004-ம் ஆண்டுகளில் சிவமொக்கா தொகுதிக்கு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் முறையே காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைதொடர்ந்து 2005-ம் ஆண்டு பா.ஜனதாவில் இருந்து விலகிய பங்காரப்பா, சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அவர் எம்.பி.யாக வெற்றிபெற்றார்.

இதைதொடர்ந்து 2008-ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பாவிற்கு எதிராக சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதேபோல் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் சிவமொக்காவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், எடியூரப்பா மகன் ராகவேந்திராவிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அடுத்தடுத்து அரசியல் வாழ்வில் சரிவை சந்தித்த அவர், கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி உடல்நலக்குறைவால் உயிர் இழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்