பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் மைசூரு வரை விஸ்தரிப்பு; அதிகாரிகளுக்கு தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் உத்தரவு

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை மைசூரு வரை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-06-06 19:56 GMT

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை மைசூரு வரை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் உத்தரவிட்டுள்ளார்.

பயன் கிடைக்காது

கர்நாடக தொழில்துறை, உள்கட்டமைப்புத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:-

பெங்களூரு புறநகர் ரெயில் திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது 148 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட மதிப்பீடு ரூ.15 ஆயிரத்து 767 கோடி ஆகும். தற்போதைய வடிவில் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் அதிக பயன் கிடைக்காது. இந்த திட்டத்தை ராமநகரில் இருந்து மைசூரு வரைக்கும், தொட்டபள்ளாபுராவில் இருந்து கவுரிபிதனூர், இந்துப்புரா, சிக்பள்ளாப்பூர் வழியாக கோலாருக்கும் விஸ்தரிக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

இது தொடர்பான திட்டத்தில் மாற்றம் செய்து அதற்கு அனுமதி பெற வேண்டும். தற்போதைக்கு இந்த திட்டத்தின்படி ராமநகர், சிக்பள்ளாப்பூர், தொட்டபள்ளாப்புரா, ஒயிட்பீல்டு வரைக்கும் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இந்த பகுதிகள் அனைத்தும் பெங்களூருவின் பகுதிகளாக உள்ளன. பெங்களூருவை சுற்றி 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரங்களுக்கு புறநகர் ரெயில் வசதி கிடைக்க வேண்டும்.

பெங்களூருவுக்கு தேவைப்படும் மனித வளம் அந்த நகரங்களில் இருந்து சிக்கல் இன்றி வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் மக்கள் பெங்களூருவுக்கு இடம் பெயர்வதும் தடுக்கப்படும். இந்த திட்டத்தின் முதல்கட்டத்தில் சிக்கபானவாரா முதல் பென்னிகானஹள்ளி வரை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொழிற்பேட்டை

இதை தாபஸ்பேட்டை வரை நீட்டிக்க வேண்டியது அவசியம். அங்கு தொழிற்பேட்டை உள்ளதால், இந்த வசதி அவசியம் தேவைப்படுகிறது. இந்த பணியை முதல் கட்டத்திலேயே மேற்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்க வேண்டும் என்பது நமது நோக்கம்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்