மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளரின் கடையை தீ வைத்து கொளுத்திய தந்தை
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளரின் கடையை தந்தை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தின் சேரநல்லூரில் கண்ணன் (வயது 51) என்பவர் பேக்கரி வைத்துள்ளார். கண்ணனின் பேக்கரி கடைக்கு கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில் அதேபகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி இனிப்பு வாங்க வந்துள்ளார்.
அப்போது, அந்த சிறுமிக்கு பேக்கரி உரிமையாளர் கண்ணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இரவு 8 மணியளவில் கண்ணனின் கடைக்கு வந்து பேக்கரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், கடையின் பெரும்பகுதி எரிந்து சேதமானது.
கடைக்குள் இருந்த கண்ணனின் மனைவிக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்ணன் மீது அச்சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளர் கண்ணனை போலீசார் கைது செய்தனர். அதேவேளை, பேக்கரியை தீ வைத்து கொளுத்தியதாக கண்ணனின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.