கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பா.ஜனதாவை ஆதரிக்கின்றன
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பா.ஜனதாவை ஆதரிப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அருகதை இல்லை
தீபாவளியை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு பரிசு கொடுத்ததாக என் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. பரிசு கொடுக்க வேண்டும் என்று நான் யாருக்கும் உத்தரவிடவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் யார்-யாருக்கு என்னென்ன கொடுத்தனர் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் என்னை குறை கூற காங்கிரஸ் தலைவர்களுக்கு அருகதை இல்லை.
பரிசு பொருட்கள் விவகாரம் குறித்து யாரோ ஒருவர் லோக்அயுக்தாவில் புகார் அளித்துள்ளார்.
அதுபற்றி விசாரணை நடைபெறட்டும். எல்லா பத்திரிகையாளர்களும் பரிசு பெற்றனர் என்று குறை கூறுவதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் மிக மோசமாக கருத்து வெளியிட்ட காங்கிரஸ் கட்சியை கண்டிக்கிறேன்.
பழங்குடியினர் அணி
பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பா.ஜனதாவை ஆதரிக்கின்றன. வருகிற மாதத்தில் பல்லாரியில் எங்கள் கட்சியின் பழங்குடியினர் அணி மாநாடு நடைபெற உள்ளது. டிசம்பர் மாதத்தில் மகளிர் அணி மாநாடு நடக்கிறது.
இன்று (நேற்று) கலபுரகியில் எங்கள் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு நடக்கிறது. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.