கேரளாவில் அவலம்: 4 ஆண்டுகளாக மாமியாரை அடித்து, குருடாக்கி, துன்புறுத்திய மருமகள்
கேரளாவில் 4 ஆண்டுகளாக மாமியாரை அடித்து, குருடாக்கி, துன்புறுத்திய மருமகள் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவின் கொல்லம் அருகே வசித்து வரும் 35 வயது பெண் ஒருவர் தனது மாமியாரை அடித்து, துன்புறுத்தி வந்துள்ளார். வயது முதிர்ந்த காலத்தில் சரியாக உணவு கொடுக்காமல், உடல் மற்றும் கை, கால்களில் அடித்து காயப்படுத்தி உள்ளார்.
இதில், உடல் முழுவதும் சிராய்ப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து உள்ளன.
இதுபற்றி அறிய வந்த மாமியாரின் சகோதரர் உடனடியாக தனது சகோதரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை ஒன்றில் சேர்த்து உள்ளார். மருமகளின் செயலால் மாமியாருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது.
இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாமியாரின் வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். தப்பியோடிய குற்றவாளியை தேடி வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர். எனினும், கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மருமகள் மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.