பெங்களூருவில் தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் கொலை
பெங்களூருவில் தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு:
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா போலீஸ் எல்லைக்குட்பட்ட கூட்லு அருகே வசித்து வந்தவர் ராஜு. டிரைவரான இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு கூட்லு அருகே ஏ.இ.சி.எஸ். லே-அவுட்டில் உள்ள கோவில் முன்பாக வைத்து ராஜுவுக்கும், 3 நபர்களுக்கு இடையேயும் திடீரென்று வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நபர்கள், ராஜுவை அடித்து, உதைத்து தாக்கியதாக தெரிகிறது.
அப்போது கீழே விழுந்த ராஜுவின் தலையில் அந்த நபர்கள் கல்லை தூக்கிப் போட்டதாக தெரிகிறது. இதில், தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அங்கிருந்து 3 பேரும் ஓடிவிட்டார்கள். இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பரப்பன அக்ரஹாரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ராஜுவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே பணப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அந்த சந்தர்ப்பத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.