அரசாங்கத்தை நாங்கள் இயக்கவில்லை; நிர்வகிக்க மட்டுமே செய்கிறோம் - கர்நாடக மந்திரி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு!
மந்திரி பதவியில் இருந்து கொண்டு, அவர் இவ்வாறு கூறியிருப்பது பொறுப்பற்ற செயல் என்று கண்டனம் எழுந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மந்திரி ஒருவரின் கருத்து, ஊடகங்களில் கசிந்து, அம்மாநில முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலங்களில் கர்நாடக முதல் மந்திரிக்கு எதிராக அதிருப்தி அதிகரித்துள்ளது. அங்கு தொடர்ந்து நிகழம் வகுப்புவாத கலவரம் என பல சிக்கல்கள் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், "அரசாங்கத்தை நாங்கள் நடத்தவில்லை; அதை நிர்வகிக்க மட்டுமே செய்கிறோம்" என்று கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜே.சி.மதுசாமி பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த கருத்துக்கு சொந்தக்காரரான அந்த மந்திரி, தான் பேசிய இந்த கருத்துக்கள் உண்மையானவை என்றும், ஆனால் அவை சூழலுக்கு அப்பாற்பட்டவை என்றும் உறுதிப்படுத்தி உள்ளார்.
கர்நாடக அரசில் மந்திரியாக இருக்கும் எஸ்.டி.சோமசேகர் இந்த கருத்தை ஏற்கவில்லை. அவர் கூறுகையில், "நாங்கள் அரசாங்கத்தை நிர்வகிக்கிறோம் என்று அவர் நினைத்தால், கர்நாடக சட்டத்துறை மந்திரி பதவியில் இருந்து அவர் உடனடியாக விலக வேண்டும்.
அவர் அரசாங்கத்தின் ஒரு அங்கம். ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்திலும் அவர் ஒரு அங்கம் வகிக்கும் நபர். மந்திரி பதவியில் இருந்து கொண்டு, அவர் இவ்வாறு கூறியிருப்பது பொறுப்பற்ற செயல்" என்று கண்டித்தார்.