தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி; வாலிபர் கைது

தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-11-20 18:45 GMT

பொம்மனஹள்ளி:

பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பேகூர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மண்டல மேலாளராக திவ்யா என்பவரும், கிளை மேலாளராக உமேஷ் என்பவரும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த வங்கிக்கு வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் வந்தனர்.

அப்போது அதில் ஒரு வாடிக்கையாளர் நேரடியாக திவ்யா இருக்கும் அறைக்கு சென்றார். மேலும், தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து பணத்தை கொடுக்கும்படி மிரட்டினார். அந்த சமயத்தில் அவர், அபாய ஒலி எழுப்பும் சுவிட்சை ஆன் செய்தார்.

இதனால் பயந்துபோன மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை கிளை மேலாளர் உமேஷ் விரட்டி சென்றார். மேலும், திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் மர்மநபரை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், அவரை பொம்மனஹள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே வங்கிக்கு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக வந்து சென்றவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்