25 கிலோ யானை தந்தம் விற்க முயற்சி; 2 பேர் கைது

25 கிலோ யானை தந்தம் விற்பனை செய்ய முயன்றதாக ராம்நகரை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-01 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூரு கிரிநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது கிரிநகரில் உள்ள தைலமர தோட்டத்தில் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் தோட்டத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்கள். அவர்களில் 2 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த யானை தந்தமும் போலீசாரிடம் சிக்கியது. பிடிபட்டவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா கோடிஹள்ளி கேரிந்தாப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிகுமார் (வயது 45) மற்றும் சோமசேகர் என்ற சிவண்ணா (58) என்று தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும், ராமநகரில் இருந்து பெங்களூருவுக்கு யானை தந்தத்தை கடத்தி வந்த விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. வேறு ஒரு நபரிடம் இருந்து வாங்கி வந்து யானை தந்தத்தை விற்க முயன்றதாக கூறப்படுகிறது. கைதான 2 பேரிடம் இருந்து 25 கிலோ எடையுள்ள ஒரு யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்