நிர்வாண பூஜை செய்தால் பேய் விலகும்... கேரளாவில் அடுத்தடுத்து வெளிவரும் போலி மந்திரவாதிகளின் அட்டூழியங்கள்

கொல்லம் அருகே பெண்ணை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக மாமியார் கைது. மேலும் கணவர், மந்திரவாதி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-22 11:40 GMT

கேரளா:

கேரளாவில் செல்வந்தராகும் ஆசையில் 2 பெண்களை நரபலி கொடுத்து கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் மற்றொரு இளம்பெண் தன்னை நிர்வாண பூஜையில் கணவர் குடும்பத்தார் கலந்துகொள்ள வற்புறுத்தியதாக புகார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மாமியார், கணவர் தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக புகார் கொடுத்துள்ளார்.

ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண் சடையமங்கலம் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவுக்கு என்னை கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் அழைத்து சென்றனர். தேனிலவுக்கு செல்வதாக கூறி அழைத்து சென்ற அவர்கள், அங்கு செல்லாமல் தமிழகத்தில் உள்ள நாகூருக்கு அழைத்து சென்றனர். அங்கு ஒரு ஓட்டலில் நாங்கள் தங்கி இருந்தோம். அன்றிரவு என்னை கணவர் மற்றும் குடும்பத்தார் இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றனர்.

கொலை முயற்சி

அங்கு மந்திரவாதி ஒருவர் தலைமையில் பூஜை நடந்து கொண்டிருந்தது. அந்த பூஜையில் பெண் ஒருவர் நிர்வாணமாக அமர வைக்கப்பட்டார். அதுபோல என்னையும் நிர்வாணமாக அமரும்படி கணவர் குடும்பத்தினர் கூறினர். நான் அதற்கு மறுத்தேன். இதனால் அவர்கள் என்னை தாக்கி சித்ரவதை செய்தனர். இதையடுத்து நாங்கள் அங்கிருந்து திரும்பினோம். அப்போது கணவர், அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் என்னை கார் ஏற்றிக் கொல்ல முயன்றனர்.

இதுபற்றி நான் போலீசில் புகார் செய்தேன். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பிறகு கணவரும் என்னை தொடர்ந்து மிரட்டி வந்தார். எனவே 9 மாதங்களுக்கு முன்பு கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன்.

மாமியார் கைது

சமீபத்தில் நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்ததாக மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே நானும் எனக்கு நடந்த கொடுமை பற்றி இப்போது புகார் கொடுத்துள்ளேன். என்னை நிர்வாண பூஜையில் பங்கேற்க கூறிய மாமியார், கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணின் மாமியாரை கைது செய்தனர். பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் வலைவீசி தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்