ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.14 லட்சம் கொள்ளை
சிக்கமகளூரு டவுனில் கியாஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்கமகளூரு :-
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை
சிக்கமகளூரு டவுன் கடூர் சாலையில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் காவலாளிகள் இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் காரில் ஏ.டி.எம். மையத்துக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள், உள்ளே நுழைந்து கியாஸ் கட்டரை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.
முன்னதாக தாங்கள் போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை ஏ.டி.எம். மையத்துக்கு வந்த மக்கள், எந்திரம் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
ரூ.14 லட்சம்
இதுபற்றி அவர்கள் உடனடியாக சிக்கமகளூரு டவுன் போலீசாருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசாரும், வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது கியாஸ் கட்டரை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து உள்ளே இருந்த ரூ.14 லட்சத்தை மர்மநபா்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதையடுத்து தடயஅறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர்.
மா்மநபர்களுக்கு வலைவீச்சு
இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். ஆனால் மர்மநபர்கள் ஸ்பிரே அடித்து இருந்ததால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஆனால், ஏ.டி.எம். மையத்துக்கு எதிரே உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் காரில் வந்து சென்றது பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது அந்த கார் ஹாசன் மாவட்டம் பேளூரை சேர்ந்தவருக்கு சொந்தமானது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.