மத்திய அரசின் 'அடல் பென்ஷன்' திட்டத்தில் 5.20 கோடி பேர் சேர்ப்பு
மத்திய அரசின் ‘அடல் பென்ஷன்’ திட்டத்தில் 5.20 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் 'அடல் பென்ஷன்' திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி 5.20 கோடி பேர் சேர்ந்து உள்ளனர். கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்துக்கு மேல் அதிகமாகும். அடல் பென்ஷன் திட்ட மேலாண்மையில் இதுவரை மொத்த சொத்து மதிப்பு ரூ.27 ஆயிரத்து 200 கோடி ஆகும்.
பொதுத்துறை வங்கிகளில் 9 வங்கிகள் ஆண்டு இலக்கை எட்டியுள்ளன. பீகார், ஜார்கண்ட், அசாம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், திரிபுரா, ராஜஸ்தான், ஆந்திரா, சத்தீஷ்கார். ஒடிசா, உத்தரகாண்ட் ஆகிய 12 மாநிலங்கள் தங்களது மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு உதவியுடன் ஆண்டு இலக்கை அடைந்துள்ளன.
இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்தது.