டெல்லியில் கெஜ்ரிவால் விழாவில் மோடி கோஷத்தால் சலசலப்பு
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் மத்திய அரசு இடையே மோதல் போக்கு காணப்படுகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் மத்திய அரசு இடையே மோதல் போக்கு காணப்படுகிறது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்ததால், மோதல்போக்கு இன்னும் அதிகமானது. சமீபத்தில் கெஜ்ரிவால், தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து, மத்திய அரசு நெருக்கடிக்கு எதிராக ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் கிழக்கு டெல்லியில், கெஜ்ரிவால் பங்கேற்ற நிகழ்வில் மோடி கோஷம் எழுந்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கிழக்கு டெல்லியில் குரு கோவிந்த சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் புதிய வளாக திறப்புவிழா நேற்று நடந்தது. வளாகத்தை திறந்து வைத்து முதல் மந்திரி கெஜ்ரிவால் உரையாற்றினார்.
உரையின் இடையே டெல்லி பள்ளிக் கல்வி மாடல் பற்றி கெஜ்ரிவால் குறிப்பிடும்போது, "மோடி".. "மோடி..." என்ற கோஷம் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது கெஜ்ரிவால், "என்னை ஐந்து நிமிடம் பேச விடுங்கள். எங்கள் கட்சியினர் மற்றும் பிற கட்சியினர் என்னை பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எனது கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதுபற்றி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் இது (குறுக்கிடுவது) சரியான முறையல்ல. ஜனநாயக முறையில் ஒவ்வொருவருக்கும் பேச உரிமை உண்டு.
இந்த கோஷம் கல்வியை வளர்க்குமானால், கடந்த 70 ஆண்டுகளாக அது இருந்திருக்க வேண்டும்" என்று பேசி தனது கண்டனத்தை அமைதியாக வெளிப்படுத்தினார்.
இந்த சம்பவத்தில், பா.ஜ.க.வினர் திட்டமிட்டு ரகளையில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர். விழா அரங்கிற்கு வெளியேயும் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க.வினர் எதிரெதிர் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தை துணை நிலை ஆளுனர் வி.கே.சக்சேனா திறந்து வைப்பார் என்று எதிர்தரப்பினர் கூறிவந்ததாலும் பரபரப்பு நிலவியது.