'கோமாவில் இருந்து மீள்வார்' 18 மாதங்களுக்கு முன் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலுடன் வாழ்ந்த குடும்பத்தினர்...!
தினமும் காலை கங்கை ஆற்றின் நீரை உடல் முழுவதும் தெளித்துள்ளனர்... இது மூலம் அவர் மீண்டும் உயிருடன் வருவார் என நம்பியுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ராவத்பூர் பகுதியை சேர்ந்தவர் விம்லேஷ் குமார் டிடெக்ஸ். வருமானவரித்துறை ஊழியரான இவருக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், அவரை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விம்லேஷ் குமார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு விம்லேஷ் குமாரின் உடல் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், தனது கணவர் விம்லேஷ் குமார் உயிரிழக்கவில்லை என்றும் அவர் கோமாவில் இருப்பதாக அவரது மனைவியும், குடும்பத்தினரும் கருதியுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்து உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் விம்லேஷின் உடலை அடக்கம் செய்யமால் ராவத்பூரில் உள்ள வீட்டிலேயே வைத்துள்ளனர்.
வீட்டில் விம்லேஷின் அறையில் அவரது உடலை வைத்த அவரது மனைவி, குடும்பத்தினர் அந்த உடலுடன் கடந்த 18 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளனர். விமல்குமார் உயிரிழந்த நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதா? என்பது குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது தனது கணவர் கோமாவில் உள்ளதாகவும் அவர் விரைவில் மீண்டு வருவார் எனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். அவ்வப்போது, ஆக்சிஜன் சிலிண்டரையும் குடும்பத்தினர் வீட்டிற்குள் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், விம்லேஷ் குமார் உயிரிழந்தபோதும் அவரது குடும்ப ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்கள் எந்த வித முன்னேற்றமும் இன்றி அலுவலகத்திலேயே தேங்கி கிடப்பதாகவும், இதில் சந்தேகம் உள்ளதாகவும் இது குறித்து விசாரிக்கும்படி கான்பூர் வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து தலைமை மருத்துவ அதிகாரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று போலீசார், மருத்துவக்குழுவினர் உள்பட அதிகாரிகள் அடங்கிய குழு ராவத்பூரில் உள்ள விம்லேஷ் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போதும், விம்லேஷ் உயிருடன் உள்ளதாகவும், அவர் கோமாவில் உள்ளதாகவும் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டில் உள்ள ஒரு அறையில் கிட்டத்தட்ட அழுகிய நிலையில் விம்லேஷின் உடல் படுக்கையில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த உடலை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விம்லேஷ் குமாரின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவர் மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருப்பதை கண்டறிந்த மருத்துவத்துறையினர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விம்லேஷ் குமாரின் குடும்பத்தினருக்கும் மன நலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
18 மாதங்களுக்கு முன் உயிரிழந்த நபர் உயிருடன் மீண்டு வருவார் என அவரது உடலுடன் வந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.