கார் மோதி சமையல் தொழிலாளி சாவு; விபத்தை ஏற்படுத்திய உதவி இயக்குனர் கைது

பெங்களூருவில் காா் ேமாதிய விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-20 21:57 GMT

பெங்களூரு: பெங்களூருவில் காா் ேமாதிய விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

கார் மோதி சாவு

பெங்களூரு பனசங்கரி அருகே கத்திரிகுப்பே ஜங்ஷன் பகுதியில் நேற்று காலை 7.15 மணியளவில் வாலிபர் உள்பட 4 பேர் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அந்த கார், சாலையோரம் நடந்து சென்ற வாலிபர் உள்பட 4 பேர் மீதும் மோதியது. அத்துடன் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அங்கிருந்த மின் கம்பத்திலும் மோதி நின்றது.

கார் மோதிய வேகத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் 10 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ஒருவர் பலியானார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உதவி இயக்குனர்

இதுபற்றி தகவல் அறிந்ததும் பனசங்கரி போக்குவரத்து போலீசார் மற்றும் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் குல்தீப் ஜெயின் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது காரை ஓட்டியவர் உதவி இயக்குனர் முகேஷ் என்பது தெரிந்தது. இவர், பிரபல இயக்குனர் சீனிவாசிடம் உதவி இயக்குனராக இருப்பதும், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு நேற்று அதிகாலையில் காரில் வீட்டுக்கு சென்றபோது விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தில் பலியானவர் சிவமொக்கா மாவட்டம் ஒசநகரை சேர்ந்த சுரேஷ் (வயது 28) என்பதும், பெங்களூருவில் சமையல் தொழிலாளியாக வேலை செய்ததும் தெரிந்தது. படுகாயம் அடைந்தது, சுரேசுடன் வேலை செய்த சிவராஜ், சச்சின் மற்றும் பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவரான சைலேந்திரா ஆகியோர் என்பது தெரியவந்தது.

வீடியோ வெளியானது

மேலும் முகேஷ் அதிவேகமாகவும், கவனக்குறைவாக காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பனசங்கரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது முகேசின் கார் மோதும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்