நகரசபை நிதி நிலைக்குழு தலைவர் படுகொலை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
முல்பாகலில் நகரசபை நிதி நிலைக்குழு தலைவர் படுகொலை ெசய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோலார்: முல்பாகலில் நகரசபை நிதி நிலைக்குழு தலைவர் படுகொலை ெசய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நிதி நிலைக்குழு தலைவர் கொலை
கோலார் மாவட்டம் முல்பாகல் நகரசபையின் நிதி நிலைக்குழு தலைவராக இருந்தவர் ஜெகன்மோகன் ரெட்டி (வயது 45). இவர் நேற்று காலை 5 மணி அளவில் முத்தியாலபேட்டை பகுதியில் நடைபயிற்சி ெசன்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், ஜெகன்மோகன் ரெட்டியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மர்மநபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுங்களால் அவரை தாக்கினர்.
இதில், ஜெகன்மோகன் ரெட்டி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் முல்பாகல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான ஜெகன்மோகன் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.
அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? போன்ற எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து முல்பாகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரசியல் காரணங்களுக்காக...
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் கூறுகையில், அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இந்த கொலை தொடர்பாக சில ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இதன்மூலம் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
ஜெகன்மோகன் ரெட்டி சுயேச்சையாக 2 முறை கவுன்சிலராக போட்டியிட்டு தேர்வாகி இருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி கொலையால் முல்பாகலில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.