பாலின வேறுபாடு குற்றச்சாட்டு கூறிய அசாம் மகளிர் காங்கிரஸ் தலைவி 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கம்

கட்சியில் பாலின வேறுபாடு பற்றி குற்றச்சாட்டு கூறிய அசாம் மகளிர் காங்கிரஸ் தலைவி 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2023-04-22 06:22 GMT

கவுகாத்தி,

அசாம் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவியான அங்கித தத்தா, அக்கட்சியின் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கடந்த காலங்களில் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தும், எனது பாலின அடிப்படையில் வேற்றுமைப்படுத்தியும் வந்துள்ளார். கட்சி தலைமைக்கு இந்த விவகாரம் பற்றி பல முறை கொண்டு வந்தும் அவர்கள் அதனை காது கொடுத்து கேட்கவே இல்லை என ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் எம்.பி. மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை டேக் செய்து டுவிட்டரில் குறிப்பிட்டார்.

4 தலைமுறை காங்கிரஸ்வாதியான நான், கட்சியின் உள்ளமைப்புகளில் 2 முறை போட்டியிட்டு உள்ளேன். பூத் கமிட்டிகளை அமைத்து உள்ளேன். போலீசாரிடம் அடி வாங்கி இருக்கிறேன்.

அரசியல் அறிவியல் முதல் எல்.எல்.பி. வரை டெல்லி பல்கலை கழகத்தில் படித்து உள்ளேன். பி.எச்டி பட்டமும் வாங்கி இருக்கிறேன். கட்சி நலனுக்காக அமைதி காத்தேன். ஆனால், ஸ்ரீனிவாசின் துன்புறுத்தல் நிற்கவில்லை என தெரிவித்து உள்ளார்.

கடந்த 6 மாதங்களாக ஸ்ரீனிவாஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பொறுப்பு வகிக்கும் வர்தன் யாதவ் ஆகியோர் தொடர்ச்சியாக என்னை துன்புறுத்தி வருகின்றனர்.

இதுபற்றி கட்சி தலைமைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவித விசாரணை கமிட்டியும் அவர்களுக்கு எதிராக அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டாக கூறினார். அவர் மனதளவில் துன்புறுத்தப்பட்டேன் என கூறியுள்ளார்.

எனினும், கடந்த காலங்களில் இவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை சார்பில், பல கோடி மதிப்பிலான சாரதா சிட்பண்டு ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் இருந்து தப்பிக்க அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வாவை அவர் நேரில் சந்தித்து பேசினார் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த நிலையில், அங்கிதா தத்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசிய அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா, அசாமின் மகள் அவர். அது காங்கிரஸ் கட்சியின் விவகாரம்.

அவர்கள் அதனை சரி செய்து விட்டால், சி.ஐ.டி. அல்லது போலீசாரின் தலையீட்டுக்கு தேவை இருக்காது. இந்த விவகாரம் தீர்க்கப்படவில்லை எனில், சட்டம் அதன் வேலையை செய்யும் என செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனால், இந்த விவகாரத்தில் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு உள்ளார் என கூறி அங்கிதா தத்தாவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கம் செய்து காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்