அசாம்; ரூ. 2 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்..ஒருவர் கைது
ரூ. 2 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள பிஹ்புரியா பகுதியைச் சேர்ந்த மோடிபுல் இஸ்லாம் என்ற நபரை கைது செய்தனர்.
இது குறித்து கவுகாத்தி போலீஸ் கமிஷனர் திகந்தா போரா கூறுகையில், 'கைதானவரிடம் நடத்திய விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் மிர்சா ரெயில் கேட் அருகே ஒரு வாடகை வீட்டில் சட்டவிரோத கள்ளநோட்டு நெட்வொர்க்கை நடத்தி வந்தார் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், நேற்று இரவு அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு கள்ளநோட்டு அச்சிடும் இயந்திரம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என கூறியுள்ளார்.