அசாமில் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த 5 பேர் கைது
அசாமில் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் நகோன், மோரிகோன் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 பேர், மோசடியாக சிம்கார்டுகளை பெற்று, அவற்றை பாகிஸ்தான் உளவாளிகளுக்கு வினியோகித்து வருவதாக அசாம் போலீசாருக்கு உளவுத்தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, 2 மாவட்டங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். அதில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர்கள், ஆஷிகுல் இஸ்லாம், போடார் உத்தின், மிஜனுர் ரகுமான், வஹிதுஸ் சமான், பஹருல் இஸ்லாம் ஆகும். மீதி 5 பேர் தலைமறைவாகி விட்டனர். இருப்பினும், கைதானவர்களிடமும், தலைமறைவானவர்களின் வீடுகளிலும் மொத்தம் 18 செல்போன்கள், 136 சிம்கார்டுகள், விரல் ரேகை ஸ்கேன் கருவி மற்றும் உயர்தொழில்நுட்ப சி.பி.யு., பிறப்பு சான்றிதழ், பாஸ்புக், புகைப்படம் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆஷிகுல் இ்ஸ்லாம், பாதுகாப்பு தகவல்களை ஒரு வெளிநாட்டு தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ள பயன்படுத்திய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.