துர்கா பூஜைக்கு வெறொரு நபருடன் சென்ற காதலியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்து, மூட்டை கட்டி வீசிய காதலன்

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்தே அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று உதவிகேட்டுள்ளார்.

Update: 2022-10-08 14:20 GMT

கவுகாத்தி,

அசாம் மாநிலம் சாஹர் மாவட்டம் பொஹொலா பகுதியை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளி சஞ்சய் தலி (வயது 26). இவர் அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் சஞ்சய் தலியும் காதலித்து வந்ததாக சாஹர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த 3-ம் தேதி இரவு அந்த சிறுமி கிராமத்தில் நடந்த துர்கா பூஜை நிகழ்ச்சிக்கு வெறொரு நபருடன் சென்றுள்ளார். இதனால், சிறுமியை காதலித்து வந்த சஞ்சய் தலி மிகுந்த ஆத்திரமடைந்துள்ளான்.

இதனை தொடர்ந்து, அந்த சிறுமி பங்கேற்ற துர்கா பூஜை நிகழ்ச்சிக்கு வந்த சஞ்சய் சிறுமியை ஆள்நடமாட்டமற்ற தேயிலை தோட்டப்பகுதிக்கு அழைத்துள்ளார். இதனை தொடந்து சஞ்சய் அழைத்த இடத்திற்கு சிறுமி சென்றுள்ளார்.

அங்கு அந்த சிறுமியை சஞ்சய் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதன் பின், சிறுமியின் கைகளை கட்டி சவரக்கத்தியால் சிறுமியை கழுத்தறுத்து மூட்டையில் கட்டி தேயிலை தோட்டத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளான்.

சவரக்கத்தில் கழுத்தறுக்கப்பட்டபோதும் சிறுமி உயிர்பிழைத்துள்ளார். மயக்க நிலையில் இருந்த சிறுமி பல மணி நேரம் கழித்து நினைவுக்கு வந்துள்ளார். படுகாயங்களுடன் மூட்டையில் கட்டப்பட்டிருந்த சிறுமி தனது வாயால் கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்ந்து மூட்டையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

பின்னர், கழுத்து அறுக்கப்பட்டு ரத்த காயங்களுடனும், கிழிந்த ஆடையுடனும் அந்த சிறுமி தேயிலை தோட்டத்தில் இருந்து மறுநாள் (4-ம் தேதி) அருகில் உள்ள கிராமப்பகுதிக்கு வந்துள்ளார்.

சிறுமியில் நிலையை பார்த்த கிராமத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்த சஞ்சய் தலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்