பெங்களூருவில், 5-ந் தேதி தொடங்குகிறது: 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி
பெங்களூருவில், வருகிற 5-ந் தேதி 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி நடக்கிறது.
பெங்களூரு: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி வருகிற 5-ந் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. கன்டீரவா உள்ளரங்கம், கோரமங்களா உள்ளரங்கத்தில் இந்த போட்டிகள் நடக்கின்றன. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் இந்தியா, ஜப்பான், சீனா, இந்தோனேஷியா, மலேசியா உள்பட 16 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகளுக்கான ஏற்பாட்டு பணிகளுக்கு அரசு ரூ.1.60 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த போட்டிகளுக்காக கன்டீரவா உள்ளரங்கம் ரூ.77 லட்சம் செலவிலும், கோரமங்களா உள்ளரங்கம் ரூ.8.96 கோடி செலவிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் 4 இடங்களை கைப்பற்றும் அணிகள் அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறும்.
இவ்வாறு நாராயணகவுடா கூறினார்.