தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பயன்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும்- உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

சுகாதாரத்துறையில் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பயன்கள் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.

Update: 2022-07-20 20:44 GMT

பெங்களூரு: 

சுகாதாரத்துறையில் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பயன்கள் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.

ஆராய்ச்சி மாநாடு

இந்திய தொழில்நுட்ப வர்த்தக சபை(நாஸ்காம்) அமைப்பு சார்பில் 10-வது சுகாதார அறிவியல் மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆராய்ச்சி மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையிலும் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வருகிறது. சாமானிய மக்களுக்கு கைக்கு எட்டும் தூரத்தில் சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அந்த நோக்கத்தை இன்னும் நாம் அடையவில்லை.

சுகாதார பாதுகாப்பு

அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் கிராமப்புற மக்களுக்கு இன்னும் தரமான சுகாதார சேவைகள் கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் விட சுகாதார பாதுகாப்பு மற்றும் கல்வித்துறைகள் சாமானிய மக்களுடன் நேரடி தொடர்புகொண்டுள்ளன. கர்நாடகத்தில் டாக்டர்களின் எண்ணிக்கை உலக சுகாதார நிறுவனத்தின் விகிதாசாரத்தை விட அதிகமாக உள்ளது.

மருத்துவ கல்விக்கு, மாநில அரசு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவழிக்கிறது. ஆனால் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு குறைவு போன்றவற்றால் கிராமப்புறங்களில் டாக்டர்கள் சேவையாற்ற முன்வருவது இல்லை. தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சுகாதாரத்துறையில் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பயன்கள் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

அதிக முக்கியத்துவம்

நாஸ்காம் தலைவர் தேப்ஜானி கோஷ் பேசுகையில், ''தொழில்நுட்ப துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சுகாதாரத்துறையிலும் அதன் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்