கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் முதல்-மந்திரியை மாற்ற திட்டமா?-எடியூரப்பா பரபரப்பு பேட்டி

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் முதல்-மந்திரியை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதா என்பது குறித்து எடியூரப்பா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Update: 2022-08-10 17:03 GMT

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் முதல்-மந்திரியை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதா என்பது குறித்து எடியூரப்பா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

எடியூரப்பா ராஜினாமா

இதையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி உருவாக்கி குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி அரசு 14 மாதங்கள் ஆட்சி செய்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜனதாவின் மூத்த தலைவர் எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் ஆட்சியில் 2 ஆண்டுகள் நீடித்த நிலையில் வயது மூப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து போலீஸ் மந்திரியாக பணியாற்றிய பசவராஜ் பொம்மைக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. அவர் தலைமையில் ஆட்சி அமைந்து கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித்ஷா திடீரென பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, மாநில பா.ஜனதா தலைவா் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோருடன் அமித்ஷா தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.

40 சதவீத கமிஷன்

அப்போது பசவராஜ் பொம்மையை மாற்றிவிட்டு புதிய முதல்-மந்திரியின் தலைமையில் ஒட்டுமொத்தமாக புதிய மந்திரிசபையை அமைப்பது குறித்து அமித்ஷா கூறியதாக சொல்லப்படுகிறது. அரசு ஒப்பந்ததாரர்களின் 40 சதவீத கமிஷன் புகார், சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு, கல்லூரி ஆசிரியர் தேர்வு முறைகேடு, ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை போன்றவற்றால் பா.ஜனதா அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை பா.ஜனதா மேலிடம் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பசவராஜ் பொம்மை ஆட்சிக்கு வந்த பிறகு சட்டசபை இடைத்தேர்தல், மேல்-சபை தேர்தல், நகர உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வெற்றியை பெறவில்லை. அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவுக்கு இணையாகவும், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசின் கையே ஓங்கி இருந்ததும் தெரியவந்தது. இதுவும் பா.ஜனதா மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முதல்-மந்திரி மாற்றம்

தற்போது உள்ள பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபையை மாற்றினால் மட்டுமே அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று பா.ஜனதா மேலிடம் கணக்கு போடுகிறது. ஜனதா பரிவார் குடும்பத்தில் இருந்து வந்துள்ள பசவராஜ் பொம்மையை மாற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஒருவரை ஆட்சி பீடத்தில் அமர வைத்து அதன் மூலம் இந்துக்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.

அதன் அடிப்படையில் தான் தற்போது கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றம் குறித்த பேச்சு அதிகரித்துள்ளது. பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுரேஷ்கவுடா, பசவராஜ் பொம்மையை மாற்றுவது குறித்து பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருவதாக பகிரங்கமாகவே கூறியுள்ளார். இதை வைத்து காங்கிரஸ் கட்சி பா.ஜனதா மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. கர்நாடகத்தில் தற்போது முதல்-மந்திரி மாற்றம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முதல்-மந்திரி மாற்றம் இல்லை

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று மந்திராலயம் புறப்பட்டு சென்றார். அவர் புறப்படுவதற்கு முன்பு பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் மந்திராலயத்திற்கு சென்று பூஜை செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்காக இப்போது அங்கு புறப்பட்டு செல்கிறேன். நாளை (இன்று) பெங்களூரு வந்துவிடுவேன். கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்பட மாட்டார். அவ்வாறு எந்த திட்டமும் கட்சி மேலிடத்திடம் இல்லை. முதல்-மந்திரி பதவியில் பசவராஜ் பொம்மையே நீடிப்பார். இதுகுறித்து சிலர் தேவையின்றி விவாதிக்கிறார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும். 135-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். பா.ஜனதாவை சேர்ந்த ஒருவரே முதல்-மந்திரி ஆவார்.

கட்சி மேலிடம் முடிவு செய்யும்

உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூரு வந்திருந்தபோது, கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். பசவராஜ் பொம்மை மாற்றுவது குறித்து அமித்ஷா விவாதிக்கவில்லை. சிகாரிபுரா தொகுதியை எனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இதுகுறித்து கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். இந்த விஷயம் பற்றி அமித்ஷா என்னிடம் எதுவும் பேசவில்லை.

மந்திரிசபை விரிவாக்கத்திற்கு கட்சி மேலிடம் விரைவில் அனுமதி அளிக்கும். மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பதவி காலம் நிறைவடைகிறது. அதனால் மாநில தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும்.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

அதுபோல் முதல்-மந்திரி மாற்றம் குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தைரியம் இருந்தால்...

காங்கிரஸ் கட்சியால் தேசிய தலைவரை நியமிக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி தனது பலத்தை இழந்துவிட்டது. அக்கட்சி பா.ஜனதாவில் முதல்-மந்திரி மாற்றம் குறித்து பேசுகிறது. முதல்-மந்திரி மாற்றம் குறித்து பிரதமரோ அல்லது உள்துறை மந்திரி அமித்ஷாவோ கூறியுள்ளார்களா?. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினையை அக்கட்சி முதலில் தீர்த்து கொள்ளட்டும்.

முதல்-மந்திரியோ அல்லது மாநில பா.ஜனதா தலைவரோ மாற்றப்பட மாட்டார். அவர்களின் தலைமையில் தான் சட்டசபை தேர்தலை பா.ஜனதா எதிர்கொள்ளும். எங்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான் என்று சொல்கிறோம். காங்கிரசுக்கு தைரியம் இருந்தால் முதல்-மந்திரி வேட்பாளா் யார் என்பதை கூற முடியுமா?. இந்த தைரியம் காங்கிரசுக்கு இல்லை. ஆனால் பிற கட்சியை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

பா.ஜனதாவில் பிரச்சினை

சித்தராமையாவின் பிறந்த நாள் மாநாட்டுக்கு பிறகு காங்கிரசில் தலைவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சித்தராமையாவுக்கு பதிலடி கொடுக்க டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் தேசிய கொடி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதை விட்டுவிட்டு பா.ஜனதாவில் பிரச்சினை என்று தவறான தகவலை வெளியிட்டு வருகிறார்கள்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

பா.ஜனதா மேலிடத்திற்கு பெரிய விஷயமல்ல

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற தேர்தல் நெருங்கும்போது, மக்களின் எதிர்ப்பு அலையை சமாளிக்கும் நோக்கத்தில் முதல்-மந்திரி உள்பட அனைத்து மந்திரிகளையும் மாற்றிய நிகழ்வு இதற்கு முன்பு நடந்துள்ளது. அதாவது குஜராத் சட்டசபைக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கவுள்ளது.

இதையொட்டி அங்கு சில மாதங்களுக்கு முன்பு முதல்-மந்திரி உள்பட அனைத்து மந்திரிகளும் கூண்டோடு மாற்றப்பட்டனர். அதே போல் கர்நாடகத்திலும் கூண்டோடு மந்திரிசபையை மாற்றுவது என்பது பா.ஜனதா மேலிடத்திற்கு பெரிய விஷயமல்ல. ஒருவேளை பசவராஜ் பொம்மை மாற்றப்பட்டு புதிய முதல்-மந்திரி நியமிக்கப்பட்டால் இந்த ஆட்சி காலத்தில் 4-வது முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவில் 3-வது முதல்-மந்திரியாகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்