குஜராத்தில் 10 லட்சம் அரசு வேலைகள்: அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி!
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளனர்.
ஆமதாபாத்,
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளனர்.
அங்கு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சட்டசபை தேர்தலுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதனிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் இன்று குஜராத்தின் பாவ்நகரில் இளைஞர்களுடன் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட உள்ளனர்.
டெல்லி கெஜ்ரிவால் அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். அங்கு மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., மணீஷ் சிசோடியா, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபி கிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது.இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் மத்திய பாஜக அரசுக்கும் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும் பெரும் மோதலாக வெடித்தது.
இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை ஐந்து முறை குஜராத்துக்கு சென்றுள்ளார்.
குஜராத் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். இலவச மின்சாரம், மாதம் ரூ.3,000 வேலையின்மை உதவித்தொகை, 10 லட்சம் அரசு வேலைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, அனைவருக்கும் இலவச மற்றும் தரமான மருத்துவம் மற்றும் இலவச கல்வி என்று பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.