அரவிந்த் கெஜ்ரிவால் கைது; நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தின் படுகொலை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது;-
"அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தின் படுகொலை மட்டுமல்ல, இது சர்வாதிகாரத்திற்கான அறிவிப்பு. இந்த சர்வாதிகாரத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. அலுவலகங்கள் முன்பு நாட்டு மக்கள் போராட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகம் முன்பு இன்று(வெள்ளிக்கிழமை) ஆம் ஆத்மி சார்பில் போராட்டம் நடத்தப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.