மூங்கில் வெட்டியதற்கு கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் திடீர் சாவு
மூங்கில் வெட்டியதற்கு கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். இவரைவனத்துறையினர் அடித்து கொன்றதாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா கல்லாலே கிராமத்தில் வனப்பகுதியில் மூங்கில் வெட்டியதற்கு சிவமொக்காவை சேர்ந்த ரவி(வயது 38) உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இங்கு ரவி உள்பட 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். இதையடுத்து கைதான 2 பேரையும் விசாரணைக்காக கடூர் வனத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான யானைகள் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து 2 பேரிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் ரவி அங்குள்ள கழிவறையில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். ரவி, மாரடைப்பால் இறந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அப்பகுதி மக்கள், ரவியை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டினர்.
மேலும் தகவல் அறிந்து வந்த உறவினர்கள், கிராம மக்கள் ரவியின் உடலை வாங்க மறுத்து வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சக்கராயப்பட்டணா போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு ரவி எப்படி இறந்தால் என்பது தெரியவரும். இதுகுறித்து சக்கராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.